முன்னாள் பாதுகாப்ப செயலர் கோட்டாபய மற்றும் 7பேருக்கு எதிராக வழக்கு-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழ்வருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷவுடன், நிஸங்க யாப்பா சேனாதிபதி, முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் ஜயனாத் கொழம்பகே, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா தமயந்தி ஜெயரத்ன, மேஜர் ஜெனரல் பாலித பியசிறி பிரணாந்து, மேஜர் ஜெனரல் கருணாரத்ன ஏகொடவெல மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் ஜயந்த பெரேரா ஆகியோரே இணைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்கு அனுமதியளித்தமை மற்றும் அதன்மூலம் எவன்காட் நிறுவனத்திற்கு 11.4 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட வாய்ப்பை வழங்கியமை தொடர்பிலயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கீ மூன் இலங்கை வருகை-

dsfggfஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நாட்டை வந்தடைந்துள்ளார். கொரியாவுக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட குழுவினர் விமான நிலையம் சென்று பான் கீ மூனை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த விஜயத்தின்போது பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ள அவர் அங்குள்ள நலன்புரி முகாம்களிலுள்ள மக்களையும் சந்திக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து பான் கீ மூன் லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் விஷேட உரையாற்றவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

முன்னாள் போராளி வெள்ளைவேனில் வந்தவர்களால் கைது-

white vanகிளிநொச்சியில் நேற்று பிற்பகல் 3 மணியவில் ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து, முன்னாள் போராளி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் பின்புறமாக விளங்கிட்டு கைதுசெய்யப்பட்டு, வானில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி – தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் (வயது 26) என்பரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன், நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த நிலையில், நேற்று வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால், கைகதுசெய்யப்பட்டு வானில் ஏற்றிச்செல்லப்பாட்டுள்ளார். இது தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வித நடைமுறைகளுமின்றி இக்கைது இடம்பெற்றிருப்பதால், அப்பகுதி மக்களிடையே இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை தனது மகனை அடித்து விலங்கிட்டு அழைத்துச் சென்றதாகவும், எத்தனையோ இடங்களுக்கு அலைந்து திரிந்தும் இதுவரை தனது மகனைக் காட்டவில்லை எனவும் மோகனசீலன் நிசாந்தனின் தாய் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அகதி முகாமிலுள்ள 450 குடும்பங்களுக்கு காணிகள் வழங்க தீர்மானம்-

sfdfdfவடக்கில் அகதி முகாமிலுள்ள 450 குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம் குடும்பமொன்றுக்கு தலா 20 பேர்ச்சஸ் காணி வழங்கபடவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

வடக்கில் தற்போது 34 அகதி முகாம்கள் உள்ளதுடன் 971 குடும்பங்கள் தங்கியுள்ளனர். மேலும் காணிகள் வழங்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கமே முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் உதவியையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்தா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெருமளவு தங்கத்துடன் இருவர் கைது-

gold (2)ஐந்தரை கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாம் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நேற்றிரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மாதகல் மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தகவல்கள் கூறுகின்றன.

மாணவர் ஒன்றிய எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்-

kanneer pukaiஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள்மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன நியமனம்-

sl armyஇராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ பேச்சாளராக இதுவரை, பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர் கடமையாற்றி வந்த நிலையில் புதிய பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்திருந்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியிருந்தார். அவர் தனது மேலதிக கல்வியை தொடர வெளிநாடு செல்ல இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.