Header image alt text

காணாமற்போனோர் செயலக செயலராக மனோ தித்தவெலவின் பெயர் பரிந்துரை-

Mano_thiththawella-300x200புதிதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளராக மனோ தித்த வெலவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக. அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் செயலகத்தை உருவாக்கும் சட்டத்தில், நாடாளுமன்ற சபாநாயகர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்பமிட்டார். இந்தச் சட்டத்தின்படி காணாமற்போனோர் செயலகத்தின் உறுப்பினர்களாக, எல்லா இனங்களையும் சேர்ந்த ஏழு பேர் நியமிக்கப்படுவர். அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின்படி, ஜனாதிபதியே இந்த உறுப்பினர்களை நியமிப்பார். காணாமற்போனோரைத் தேடுதல், கண்டறிதல், காணாமற்போனோரின் உறவினர்களுக்கான உதவிகளை வழங்குதல், காணாமற்போனோர் பற்றிய தரவுகளை ஆவணப்படுத்தல் ஆகிய பணிகள் இந்தச் செயல கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும். காணாமற்போனோர் செயலகத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோர், உண்மை கண்டறிதல், விசாரணைகளை மேற்கொள்ளல், மனித உரிமை சட்டங்கள், அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், மற்றும் மனிதாபிமான விவகாரங்களில் அனுபவமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று காணாமற்போனோர் செயலகத்தை உருவாக்கும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் செயலகத்தின் செயலாளர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள, மனோ தித்தவெல, சந்திரிகா குமாரதுங்க தலைமையில் செயற்படும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் செயலாளர் நாயகமாகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராதனை பல்கலைக்கழக 10 மாணவர்களுக்கு வகுப்புத் தடை-

peradeniya universityபேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைபீடத்தின் 10 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த 10 பேருக்கும் இரு வாரங்களுக்கு இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 22ம் திகதி இரவு அந்த பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தைச் சேர்ந்த இரு மாணவக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இதில் ஐவர் காயமடைந்திருந்தனர். இவர்கள் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக உயர்வு-

italyமத்திய இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவில் புதன்கிழமை அதிகாலை 3.32க்கு ஏற்பட்ட பலமான நிலநடுக்கத்தால் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளை தோண்டியும் மற்றும் தங்களது கைகளால் இழுத்தும் உயிர் தப்பியவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி வருகின்றனர். மீட்புப்பணி நடைபெறும் இடங்களில், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளான அம்பிரியா, லசியோ மற்றும் மார்ஷ் பகுதிகளில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தன்னர்வ தொண்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தாலிய செஞ்சிலுவை அமைப்பு 160-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடிழந்தவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து கடலில் மூழ்கி இலங்கை தமிழர்கள் 5 பேர் மரணம்-

englandகடலில் மூழ்கி இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 5 பேர், இங்கிலாந்தில் உள்ள கடலில் மூழ்கி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில் இருந்து இவர்களது சடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இறந்தவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் மக்கள் கூட்டமாக திரண்டு வந்து கடற்கரைக்கு வருகின்றனர். இந்நிலையில், கடலில் குளிப்பதற்காக சென்ற 5 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சில மணித்தியாலங்களின் பின்னர் இருவர் மீட்கப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் திங்கட்கிழமையும் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

சஜீத், நவீன், இந்திக்க சென்ற ஹெலிக்கொப்டர் நுவரெலியாவில் அவசரமாக தரையிறக்கம்-

sdfddஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பயணித்த தனியார் ஹெலிக்கொப்டர் ஒன்று, நுவரெலியாவிலுள்ள மரக்கறி விவசாய நிலமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதி அமைச்சர் இந்திக்க பண்டார ஆகியோரே குறித்த ஹெலிக்கொப்டரில் பயணித்துள்ளனர். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவே அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நுவரெலியா சீதாஎலிய பகுதியில் இன்று காலை 09.30அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, அந்த ஹெலிக்கொப்டரில் பயணித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்னர் பிரிதொரு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா குடியிருப்பு முகாமிலிருந்து இராணுவம் வெளியேற்றம்-

army campவவுனியா குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வவுனியா பாதுகாப்பு சேனை தலைமையகத்திற்குச் சொந்தமான இராணுவ முகாம் கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி அந்த கட்டத்தை மீள வவுனியா மாவட்ட செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம் மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் குறித்த கட்டடம் இராணுவ முகாமுக்காக கையளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் குறித்த கட்டடத்தை மீள பெற்றுத் தருமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வெள்ளம் காரணமாக 300ற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு-

flood indiaவடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பருவமழை வெள்ளம் காரணமாக 300 இற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பீகார் மற்றும் இந்தியாவின் கிழக்கு பகுதி நகரங்களில் கங்கை நதியின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் 24லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தங்களது வீட்டை விட்டு வெளியேற விரும்பாதவர்களை பேரழிவு நிவாரண அதிகாரிகள் படகுகளில் சென்று பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமான் கொலை, 5 வர்த்தகர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை-

sulaimanகொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகிக்கப்படும் ஐந்து வர்த்தகர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதித்து, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழும்பு குற்றப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்ற பிரிவினர் மற்றும் கேகாலை பொலிஸார் இணைந்து 8 குழுக்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மாவனெல்ல நீதவான் எல்.கே.மஹிந்த மேற்கொண்டதாக, மேலதிக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக கேகாலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு விஷேட வைத்தியர் மூலம் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், பிரிஷாந்த ஜெயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார். Read more

ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பகுதிகளில் மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு)-

viber imahgeமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் நேற்றையதினம் வட மாகாணசபை உறுப்பினர். திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் பிரதேச கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தினூடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன. மேற்படி நிகழ்வில் ஓட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர். Read more

பள்ளிமுனை மக்களின் எதிர்ப்பினால் காணி அளவீடு தற்காலிகமாக கைவிடப்பட்டது-

sdfdffdfdகடற்படையினர் வசமுள்ள தமது பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னார் – பள்ளிமுனை கிராம மக்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். யுத்தம் காரணமாக மன்னார் – பள்ளிமுனை கிராமத்தின் கடற்கரையை அண்மித்த மக்கள் தமது சொந்த இடத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றனர். யுத்தம் நிறைவுற்ற பின்னர் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியேறும் எதிர்பார்ப்புடன் வந்த மக்களுக்கு, அங்கு குடியேறுவதற்கான சூழல் காணப்படவில்லை.

பூர்வீகக் காணிகளில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்ததை அடுத்து, தமது காணிகளை விடுவிக்கக்கோரி 2013 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இந்த மக்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை இடம்பெறுகின்ற நிலையில், கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதற்கு நில அளவை திணைக்களத்தினர் இன்று சமூகமளித்திருந்தனர். இதனை அறிந்த மக்கள் தமது பூர்வீகக் காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடற்படை முகாம் அமைந்துள்ள வீதியை மறித்து இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். Read more

வடக்கு, கிழக்கில் 10ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை-

housing schemeவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உரிமையாளர்களின் முன்னெடுப்புடன் கூடிய பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதவிர, உள்ளக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.

பூந்தோட்டம் நலன்புரி நிலையங்களிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த மக்களுக்கு வவுனியா வடக்கு சின்ன அடம்பனில் 66 வீடுகளும், புளியங்குளத்தில் 31 வீடுகளுமாக 97 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்குள் நிர்மாணித்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நலன்புரி நிலையங்களிலுள்ள 936 குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. Read more

சுலைமான் தொடர்பில் அறிந்தால் உடன் தகவல் வழங்குமாறு கோரிக்கை-

sulaimanகொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தலாவல எவன்யூ இலக்கம் 21இல் வசிக்கும் வர்த்தகரான மொஹமட் ஷாகிப் சுலைமான் என்பவர் காணாமல் போயுள்ளார். கடந்த 21ம் திகதி இரவு 11.15 அளவில் வீட்டிக்கு அருகில் வைத்து அவர் காணாமல் போயிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என, பம்பலபிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இதன் பொருட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், இது குறித்த தகவல் அறிந்தால் கீழ் வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
071-8591727 – கொழும்பு குற்ற பிரிவுப் பணிப்பாளர்
071-8591735 – குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி
071-8591580 – பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம்

புதுக்கடை நீதிமன்றுக்குள் அடிதடி, இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு-

courtsகொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆடைகளை கிழித்துக்கொண்டு அடித்து சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பெண்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் ஒகஸ்டா அதபது உத்தரவிட்டுள்ளார். சாந்தமாலி பெரேரா(வயது 28) மற்றும் சுதாச்சாரி மாலினி (வயது 42) ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரு வேறு குற்றச்சாட்டின் பேரில் மாலினியின் கணவரும் அவரது மகனும் வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பிணை கோரி புதுக்கடை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாலினி மன்றுக்கு பிரவேசித்தார். இதன்போது, சாந்தமாலி, ‘கள்ளனின் தாய் வந்துள்ளார்’ என கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாலினி நீதிமன்றத்துக்குள் அவருடன் முரண்பட்டதையடுத்து, இருவரும் ஆடையை கிழித்துக்கொண்டு அடித்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நடவடிக்கையை குழப்பியதற்காகவும் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டுக்காகவும் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அனுர சேனநாயக்க, சுமித் ஆகியோர் தொடர்ந்து விளக்கமறியலில் தடுத்துவைப்பு-

anura senanaike policeமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி சந்தேகநபர்களை அடுத்த மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அனுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு-

pillaiyanமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மாதம் 07ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.

வெலே சுதாவின் வழக்கு ஒத்திவைப்பு-

vele sutha friend6.7 கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனைப் பெற்று வரும் வெலே சுதாவின் வழக்கு விசாரணையை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வி.டி.எச். மொராயஸ், எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று புதன்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மணிலால் வைத்தியதிலக நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்காததன் காரணத்தினால் நீதிபதி மொராயஸினால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

களவான தொகுதி அமைப்பாளர் ஜனக வாகும்பரவும் இராஜினாமா-

sdaaசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் களவான தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனக வாகும்பர குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கடந்த 19ம் திகதியும், ஹோமாகம ஆசன அமைப்பாளராக பதவியில் இருந்த விலகுவதாக பந்துல குணவர்த்த கடந்த 21ம் திகதியும் அறிவித்தனர். இதனையடுத்து, டலஸ் அழகப்பெருமவின் இடத்திற்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும், பந்துலவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி திலகசிறியும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமற்போனோர் அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் ஒப்பம்-

karu jayasuriyaகாணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் கருஜயசூரிய இன்று கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் பிரதி செயலாளர் நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தல், அதனை நிர்வகித்தல் மற்றும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறித்த சட்டமூலத்தை அவசரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முற்படுவதாக தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். எவ்வாறாயினும், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் கருஜயசூரிய இந்த சட்டமூலத்தில் இன்றைய தினம் காலை கையொப்பமிட்டார். இதன்மூலம் காணமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலம் இன்றுமுதல் சட்டமாக மாறியுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல கூறியுள்ளார். ஆகவே இன்று முதல் இந்த சட்டம் நடைமுறையிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் காலமானார்-

nathanமுன்னாள் சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 92 ஆவது வயதில் நேற்று காலமானார். இவர் சிங்கப்பூரின் ஆறாவதும் மிக நீண்ட காலம் ஜனாதிபதியாக பதவி வகித்தவரும் ஆவார். 1999ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இரு தடவைகள் அவர் சிங்கப்பூரின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், தென்கிழக்கு ஆசிய கல்வி நிறுவனம், சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறை ஆகியவற்றின் மூத்த கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதிபராகப் பதவியேற்பதற்கு முன்னதாக, குடியுரிமைப் பணிகள், பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளில் எஸ்.ஆர்.நாதன் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவராக, கடந்த 1988 ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டுவரை அவர் பணியாற்றியுள்ளார். அவரது மறைவிற்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லூங், ஜனாதிபதி டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் ஏற்பாடுகளை செய்துவருகிறது. சிங்கப்பூர் தமிழரான எஸ்.ஆர். நாதன் 1924ம் ஆண்டு ஜூலை 3ம் திகதி பிறந்தார். சிங்கப்பூர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 1955ல் மருத்துவ சமூக அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இயக்குநர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் தூதர் என படிப்படியாக பல முக்கிய பதவிகளில் வகித்து இறுதியில் சிங்கப்பூர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி தெற்கில் கையெழுத்து போராட்டம்-

dfdfd (2)தென்பகுதி மக்களிடையே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் கையெழுத்துப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தீர்மானித்துள்ளது. அரசியல்வாதிகள், தொழிற்சங்கத்தினர், சிவில் சமூகத்தினர் உட்பட அனைத்து தரப்பினரையும் இணைத்து இப்போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒன்றுக்கொன்று முரணான கருத்துகள் வெளியாகிவரும் நிலையிலேயே இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களும், தமிழ்க்கட்சிகளும் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்துக்கு நீதிமன்றம் மூலம் தீர்வைக் காணமுடியாது எனவும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையின் அவசியம் குறித்த கருத்தை தென்பகுதியில் உருவாக்குவதற்காக இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஐ.நா.மனித உரிமை பேரவையின் செப்ரெம்பர் அமர்வுக்கு முன் தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பாரிய பேரணியை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்க்கு அகதி அந்தஸ்து வழங்குவதில் சுவிஸ்லாந்து கடும்போக்கு-

switzerlandஇலங்கைப் பிரஜைகளுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக சுவிஸ் குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுவிஸ் வெளிவிவகார அமைச்சு, சுவிஸ் குடிவரவு திணைக்களம் ஆகிய இரண்டும் இணைந்து இலங்கையில் மேற்கொண்ட ஆய்வை அடுத்து சுவிட்சலாந்தில் இலங்கையர்கள் அகதி தஞ்சம் கோருவது தொடர்பில் 47 பக்க அறிக்கை ஒன்றை சுவிஸ் குடிவரவுத் திணைக்களம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுவிஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு, கிழக்கு உட்பட பல பாகங்களைப் பார்வையிட்டதுடன் பல தரப்பினரையும் சந்தித்தது. இதனடிப்படையில் தற்போதைய இலங்கை நிலவரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் என்பன காணப்படுவதாகவும் தெரிவித்தது. எனினும் உண்மையாக அச்சுறுத்தல் உள்ளவர்கள் தொடர்பாகப் பரிசீலிக்கப்படுமென செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கையர்க்கு அகதித் தஞ்சமும் அடைக்கலமும்; கொடுத்த சுவிஸ், பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகள் இப்பொழுது தங்கள் கதவுகளை இறுக மூடிக்கொண்டுள்ளன

வாகன விபத்தில் மருத்துவத் தாதி உயிரிழப்பு-

deadதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில், மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மருத்துவமாது உயிரிழந்துள்ளார் என, சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை 10.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர், ஈச்சிலம்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த எஸ்.சந்தானலக்ஸ்மி (வயது 46) எனத் தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய வான் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே மோதல்-

beatபேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவக்குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று இரவு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள் மற்றும் இரண்டாம் வருட மாணவர் குழுக்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல்களில் 12 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவர்களால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, Read more

We’re Giving Government Our Fullest Support – D. Sidharthan

by Thushari Nathaniel

sdfdfPLOTE leader and TNA MP D. Sidharthan says he has confidence in the current regime that it will deliver justice to the Tamil people. He said that even though the government has good intentions, they implement these mechanisms extremely slow, so the Tamil people are fast losing faith in the government. In an interview with The Sunday Leader he said that the passing of the Office of Missing Persons (OMP) Bill was also a good sign that the government is doing its best for the Tamil people. He, however, said that it is far too early to comment on this issue and time will prove the government’s sincerity.

Following are excerpts of the interview;

Q: OMP bill was passed Thursday without a vote. How confident are you that the OMP bill will ensure justice for the Tamil people?

A: What is more important is the implementation of the bill than passing it. Any bill can be passed but there is no purpose if it cannot be implemented. The efficiency and commitment of the commissioners is left to be seen. Only time will prove if OMP will be of any use. This we cannot decide at this juncture. We have to wait and see.

The implementation is the most important factor, and we must see who will be appointed to this commission and what powers will be given to them etc. The bill as it is now may contain some weaknesses; but TNA amendments and all, it’s a good start. The government has stepped in the right direction. As the co-sponsors of the UN resolution, they have started moving in the right direction. However, it’s too early to speculate. Read more

ஐ.நா அலுவலகம் நோக்கி நீதிக்கான நடைபயணம்-

walkingதமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த மதத்தை பரப்பும் செயற்பாடுகளை எதிர்த்தும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து ஐ.நா செயலகம் வரை நடைபெற்றுள்ளது. திட்டமிட்ட வகையில் தமிழர் தாயகப்பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் புத்த சிலைகளையும் நிறுவி, இராணுவ பலத்துடன் தமிழர் தாயகத்தில் சிங்;களமயமாக்கலை எதிர்த்தும், இனத்தின் தனித்துவத்தை பாதுகாத்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கானதும், காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் ‘ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைபயணம்’ என்ற தொனிப்பொருளில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது. ஆனையிறவு உமையாள்புரம் ஆலயமுன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி, கிளிநொச்சி வரை சென்று கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் மற்றும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நடைபவனியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ் தேசியக முன்னணி செயலாளர், அரசியல் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், கிராம மட்ட அமைப்புக்கள், காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறப்பிடத்தக்கது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பத்தரமுல்லைக்கு இடமாற்றம்-

immigration deptமக்கள் நலன் கருதி, வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம், பத்தரமுல்ல, ‘சு{ஹருபாய’ புதிய கட்டத்தொகுதிக்கு, எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்படவுள்ளது. ஆகையால், கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல: 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்கள், எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படும். வெளிநாட்டுப் பயண அனுமதிப்பத்துக்கான சாதாரண சேவை, விசா விநியோகம், கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் மற்றும் குடியுரிமைச் சேவை என்பன ஓகஸ்ட் 29ஆம் திகதியன்று மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெறும். அதேநேரம், கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவை இடம்பெறமாட்டாது. எனினும், ஓகஸ்ட் 26 இலிருந்து 29 வரையான திகதிகளில் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் துறைமுகச் செயற்பாடுகள் இயல்பான முறையில் நடைபெறும் என குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜயந்தி குருஉதும்பலவை உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக நியமிக்க தீர்மானம்-

jeyanthiபெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மகளிர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக ஜெயந்தி குருஉதும்பலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் என்ற அவரது சாதனையை கௌரவிக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இவ்வருடம் ஆகஸ்ட் 19ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி வரை இவருக்கு இப்பதவி வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 24ம் திகதி இந்த நியமனம் உத்தியோகபூர்வமாக, ஜெயந்தி குருஉதும்பலவுக்கு, அமைச்சர் சந்திரானி பண்டாரவால் வழங்கிவைக்கப்படவுள்ளது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா நியமனம்-

laksman yapaசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதைய நிதி இராஜாங்க அமைச்சராவார்.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவே சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்தார். இந்தநிலையில் அவர், தான் பதவி விலகுவதாக கடந்த 19ம் திகதி அறிவித்த நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் யாபா நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை-

namal (2)முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இரண்டு பேரையும், கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளார். நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த திங்கட்கிழமை (15), சமுகமளித்து வாக்குமூலமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அப்பிரிவின் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர், நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமுகமளித்திருந்தார். இதன்படி இன்று பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் நான்கில் சந்தேகநபர்களை விடுவித்து, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஹோமாகம ஆசன அமைப்பாளராக காமினி திலகசிறி நியமனம்-

sdssசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம ஆசன அமைப்பாளராக காமினி திலகசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேல் மாகாண சபை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்றையதினம் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தார்.

மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு-(படங்கள் இணைப்பு)-

DSC04529சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு எயிட்ஸ், சயரோகம், மலேரியா ஆகிய நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின்கீழ் (புளுயுவுஆ) முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடத் தொகுதியானது வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களால் 19.08.2016 வெள்ளிக்கிழமை மாலை 3.30அளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராஜா ரவிகரன், (வடமாகாண பிரதி அவைத்தலைவர்) அன்ரனி ஜெகநாதன், கமலேஸ்வரன் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் பூங்கோதை, முன்னாள் பிரதேச சபை செயலாளர், வைத்தியர்கள், தாதியர் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
Read more