அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம்-

V.T.இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் நாளை (02.09.2016)வெள்ளிக்கிழமை காலை 7மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. 31வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெறவுள்ளது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.