கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு கடும் பாதுகாப்பு-

UN officeகொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு முன்பாக கடும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மேலதிக பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு, புதன்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்தார். அவருடைய வருகையை எதிர்த்தும், சர்வதேச விசாரணைக்கான அதிகாரங்களை பிரயோகிக்க வேண்டாமென வலியுறுத்தியும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கு நீதிக்கோரி ஐக்கிய சமாதான முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில், அவரது வருகையையொட்டி கொழும்பில் உள்ள பிரதான வீதிகளில் ஐ.நா கொடியும், தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு-

namalநிதி மோசடி சட்டத்தின்கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். குறித்த விசாரணை அறிக்கை முழுவதுமாக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி, சட்டமா அதிபரின் பணிப்புரை கிடைக்கப் பெற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காத இருவரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறும் பொலிஸார் இதன்போது கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவருக்கும் பிடியாணையையும் பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு மீளவும் டிசம்பர் 8ம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சேர்த்த 45 மில்லியனுக்கும் அதிகமாக பணத்தைக் கொண்டு ஹெலோகோப் எனும் நிறுவனத்தில் பங்குகளைக் கொள்வனவு செய்ததாகவே இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம்-

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். எஸ்.கியூ 469 என்ற சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக அவர் பயணித்துள்ளார்.

பிரதமருடன் மேலும் 5 பேர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். சிங்கப்பூரில் நடைபெறும் 2016 ஆம் ஆண்டிற்கான இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்து சமுத்திர வலைய நாடுகளின் பங்குபற்றுதலுடன் இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் தலைமை உரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வீரவங்சவின் சகோதரர் கைது, பீ.பி.ஜயசுந்தர நிதி குற்ற விசாரணைப் பிரிவில்- 

vimalபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மூத்த சகோதரரான சரத் வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்த அவர் இன்றுகாலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இதனையடுத்து சரத் வீரவங்சவைக் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் வாகனங்கள் விடயத்தில் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றுகாலை ஆஜராகியிருந்தார். நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.