பான் கீ மூனின் கவனத்தை ஈர்ப்பதற்கு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்-

sivajilingamஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூனின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் நாளை யாழ்.மாவட்டத்திற்கு வருகைதர இருக்கும் நிலையில், யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை மற்றும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், நாளை நண்பகல் 12 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். இது ஐ.நா செயலாளருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு நீதி வழங்குங்கள் என அவரை எதிர்த்துக் கேட்பது போன்று இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார். இதேவேளை பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நாளை யாழ். பலாலி வீதியில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு தொடர்பான இன்றைய வடமாகாணசபை தீர்மானம்-

pungudu-001aabbccபுங்குடுதீவு ஊரதீவுப் பகுதியிலுள்ள “திருநாவுக்கரசு வித்தியாசாலை”யானது மிகவும் இடிந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக ஊரதீவு மக்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள், வடமாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரட்ணம் அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “புங்குடுதீவின் ஊரதீவு பகுதியில் அமைந்துள்ள மேற்படி திருநாவுக்கரசு முன்பள்ளியின் நிலைமைகள் தொடர்பிலும், அப்பகுதியிலுள்ள அதாவது கேரதீவு மற்றும் ஊரதீவு பகுதியிலுள்ள சிறுவர்கள் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் நீண்டதூரம், நடந்துசென்று மடத்துவெளி கமலாம்பிகை பாடசாலையில் கல்விகற்று வருவதனால் அவர்கள் சோர்வடைந்து படிப்பில் அதீத கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருப்பது உள்ளிட்ட பல விடயங்களையும் சுட்டிக்காட்டி” உரையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இது குறித்து வடமாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரட்ணம் அவர்கள், “வடமாகாண கல்வியமைச்சின் ஊடாக உடனடியாக இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், மிகவிரைவில் மேற்படி பாடசாலையை திருத்தியமைத்து அதனை இயங்க வைப்பதற்கு தன்னாலான முழு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும்” சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்களிடம் கடந்தமாத இறுதியில் உறுதியளிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதன் எதிரொலியாக இன்றையதினம் (30.08.2016), வடமாகாண சபையின் கல்வியமைச்சின் கூட்ட மகாநாட்டு மண்டபத்தில் நடந்த, வடமாகாண கல்வியமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் “புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பானது” வடமாகாண சபையின் கல்வியமைச்சின், 2017 ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் நிறைவேற்றுவதென தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி வடமாகாண சபையின் கல்வியமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வடமாகாண சபை கல்வியமைச்சர் திரு.தம்பிராசா குருகுலராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்படிக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பொறுப்பாளர்களில் ஒருவரும், வடமாகாண சபை உறுப்பினருமான திரு.விந்தன் கனகரத்தினம் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களும், வடமாகாண சபையின் கல்வியமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன், வடமாகாண சபையின் கல்வியமைச்சின் மாகாண பணிப்பாளர் திரு.செ.உதயகுமார், வடமாகாண சபையின் கல்வியமைச்சின் பொறியியலாளர் திரு.சுரேஷ்குமார் உட்பட வடமாகாண சபை அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதேபோன்று புங்குடுதீவின் ஏனைய பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாக, சுவிஸ் ஒன்றியத்தின் பார்வைக்கு வந்துள்ள பல செயற்பாடுகள் ஒவ்வொன்றாக மிக விரைவில் “எம்மால் முடிந்தவரை நிறைவேற்றப்படும்” என்பதையும் அனைத்துப் புங்குடுதீவு மக்களுக்கும் அறியத் தருகின்றோம்.

இவ்வண்ணம்…
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.
30.08.2016.