வர்த்தகர் சுலைமான் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட கைது-

fgddகொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசித்துவந்த வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலையை மேற்கொண்ட சந்தேகநபரையும் அதன்பின்னர் வர்த்தகரின் சடலத்தை வாடகை வாகனம் மூலம் கொழும்பில் இருந்து மாவனெல்ல, ஹெம்மாத்தகம பகுதிக்கு கொண்டு செல்ல இணங்கிய குழுவினரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆடைத்தொழில்துறையை சேர்ந்த பிரபல வர்த்தகரான மொஹமட் சுலைமான், கப்பம் கோரப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். கடந்த 21ஆம் திகதி இரவு கார் ஒன்றில் வந்த குழுவினர் குறித்த வர்த்தகரை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து கடத்திச் சென்றிருந்தனர். இதன்பின்னர் மாவனெல்ல பகுதியிலிருந்து 24ஆம் திகதி அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மேலும் இருவரை கொழும்பு குற்றப்பிரிவினர் கைதுசெய்துள்ளதாக கூறப்படுகின்றது. சந்தேகநபர்கள் 22 மற்றும் 23 வயதானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை பகுதிகளைச் சேர்ந்த இருவரே, இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர் என்றும் இவர்களே, சுலைமானின் தகப்பனாரிடம் கப்பம் கோரியிருந்தனர் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வடமாகாண சுகாதார அமைச்சினால் விஷ ஊசி மருத்துவ பரிசோதனை-

grவிஷ ஊசி விவகாரம் மருத்துவ பரிசோதனைக்கான விபரம் விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் 01.09.2016 தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியில் தமது உடல் நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்திற்கொண்டு, வட மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களது நலன்கள் தொடர்பாக எமது அமைச்சு கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம் மேற்படி புனர்வாழ்வு பெற்றவர்கள் தமது உடல்நிலை குறித்து மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளையும், மருத்துவக் கவனிப்பையும் வழங்க வடமாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இத்தகைய மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்கள் பின்வரும் வைத்தியசாலைகளில் உரிய வைத்திய அதிகாரிகளைச் சந்தித்து தமக்கான ஆலோசனைகளையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும். மருத்துவ ஆலோசனைகளை பெற விரும்புவோர் மாவட்ட வைத்தியசாலைகளிலுள்ள வரவேற்பாளரை அணுகி மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதற்கட்டமாக எதிர்வரும் 2ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் பின்வரும் வைத்தியசாலைகளில் இம் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குச் சமுகமளிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி – பி.ப. 4 மணி
மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு – மு.ப 8 மணி
மாவட்ட பொது வைத்தியசாலை, வவுனியா – பி.ப. 1 மணி
மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார் – மு.ப 8 மணி
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் – பி.ப. 1 மணி