ஐ.நா பொதுச்செயலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வடக்கு முதல்வர் சந்திப்பு-

ban ki moonஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று பகல் யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஐ.நா பொதுச்செயலர் முதலில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தார். பின்னர் யாழ் பொதுநூலகத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பையடுத்து ஐ.நா செயலாளர் நாயகம் வலிகாமம் முகாமிற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார். இதேவேளை பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருமளவிலான மக்கள் யாழ். பொதுநூலகத்தை சூழவுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்தது. காணாமற் போனோரின் உறவினர்கள், வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் உள்ளிட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் சபாநாயகர் சந்திப்பு-

sfdfdஇலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலரை இன்றுகாலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று காலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பாராளுமன்ற அவைத் தலைவர் லக்ஷமன் கிரியெல்ல, அரசியல் கட்சிகள், பாராளுமன்ற பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பாராளுமன்ற அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்து அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். சமீபத்திய காலத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலங்கள், பாராளுமன்றத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழு போன்றன தொடர்பில் இலங்கை குழுவினர் எடுத்துக் கூறியுள்ளனர். குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள வேலைத் திட்டங்களை செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். இதேவேளை ஐ.நா பொதுச்செயலர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தார்.

இராணுவம் குறைக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்படவேண்டும்-ஐ.நா பொதுச்செயலர்-

ban ki moonவடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு நிலையான சமாதானம் தொடர்பில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் இன, மத, அரசியல் கருத்துகள், உட்பட்ட வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தையும், மனித உரிமையின் மதிப்பினையும் ஏற்படுத்துவதற்கு இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் அவர்களின் சொந்த நிலங்களுக்குச் செல்ல வேண்டும். மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் குடிகொண்டுள்ள இராணுவம் குறைக்கப்பட்டு மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும். இத்தகைய செயற்பாடுகளே மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியேழுப்பும் என ஐ.நா செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக அதேயிடத்தில் புதிய புத்தர் சிலை-

sdsssddவவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் வைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச்சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார். இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பினரே கனகராயன்குளம் புத்தர் சிலையை உடைத்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் என்.அருண்காந்த் தெரிவித்துள்ளார். உடைக்கப்பட்ட புத்தர் சிலையை மீள நிறுவுவதற்கோ அல்லது இந்து பௌத்த மதங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கோ முயற்சித்தால் தனக்கு துப்பாக்கிச் சூடு விழும் என்று அந்த நபர் அச்சுறுத்தல் விடுத்ததாக அருண்காந்த் கூறியுள்ளார். கனகராயன்குளம் குறிசுட்டகுளம் அம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையே உடைக்கப்பட்டிருந்தது. அந்த அம்மன் கோயில் பூசாரி உள்ளிட்ட அந்தப் பிரதேசத்து மக்கள், புதிய புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்ததாகவும் அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார். புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கனராயன்குளம் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். எனினும் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. (பிபிசி)