தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் சந்திப்பு-

dsfdfdfdதமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கீ மூனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் 2.30அளவில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.யோகேஸ்வரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இன்றைக்கு மக்கள் நேரடியாக முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளான காணிப்பிரச்சினை, புத்த கோயில்கள் அமைப்பு, சிறைக்கைதிகளின் விடுதலை, காணாமற்போனோர் விடயம் ஆகியவை சம்பந்தமாக அரசாங்கம் கடந்த காலங்களில் பல உறுதிமொழிகளை வழங்கிய போதிலும், இதுவரையில் அவற்றில் எதையுமே செய்யவில்லை என்றும், எனவே இவ்விடயத்தினை தாங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும், அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றும், ஒரு சரியான அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் எங்களுடைய பகுதிகளில் அமைதியைப் பேணமுடியாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார். அதற்கு பான்கீ மூன் அவர்கள் பதிலளிக்கையில், காணிகள் விடுவிப்பது உள்ளிட்ட விடயங்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக கூறியதோடு, தங்களுக்கு ஜனாதிபதியிலும் பிரதமரிலும் நம்பிக்கை இருப்பதாகவும், தைரியமாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும், அப்படி நடவடிக்கை எடுத்தால்தான் ஒரு தீர்வினைக் காணமுடியுமென்றும் தாம் ஜனாதிபதிக்கு கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.