தமிழ் மக்களுக்கு பாதகமான எந்த ஒரு தீர்வையும் ஏற்கபோவதில்லை-இரா.சம்பந்தன்-
”தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம். எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதேவேளையில், கொள்கையில் உறுதியுடன் இருக்கவேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்றுக்காலை தாவடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘தர்மலிங்கத்தின் கருத்துக்களின் அடிப்படையிலேயே தந்தை செல்வா தமது கொள்கைகளை வகுத்தார். எமது அரசியல் பயணத்தில் ஏற்பட்ட ஒழுங்குமுறைகளை அனைவரும் அறியவேண்டும். அந்தவகையில் நாடு பிளவுபடாத ஒரு தீர்வு எமக்கு வேண்டும் என நாம் கோருகிறோம். இறைமை அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தனித்துவமான முறையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு, காணி, கல்வி, சுகாதாரம், மொழி, கலாசாரம், மீன்படி, விவசாயம், என அனைத்திலும் அதிகாரம் பகிரப்படவேண்டும். இம்முறையானது, உலகில் பல நாடுகளில் நடைமுறையில் தற்போது காணப்படுகிறது. அதனடிப்டையிலேயே நாம் கோருகிறோம். அதனை நாட்டின் பல தலைமைகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அவ்வாறு பகிரப்படும் அதிகாரமானது உச்சமாக இருக்கவேண்டும். இதில் நிறைவேற்று அதிகார உரித்து காணப்படவேண்டும்.
தந்தை செல்வா, தமிழரசுக் கட்சியினை ஆரம்பித்து கொள்கையினை வகுத்து தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை கேட்டார். அப்போது தந்தை செல்வாவுடன் இணைந்து பலர் செயற்பட்டனர். அதில் தர்மலிங்கமும் ஒருவர். காலப்போக்கில் தமிழரசுக் கட்சி மக்கள் மத்தியில் பூரண ஆதரவை பெற்றது. 1960ஆம் ஆண்டு தர்மலிங்கம் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் அனைவரது மதிப்பைப்பெற்ற தலைவராக காணப்பட்டார். 1970ஆண்டு தேர்தலின் பின்னர் அரசியல் அமைப்பு மாற்றப்பட்டு புதிய அசியல் ஸ்சாஸ்திரம் உருவாக்க முயற்சிகள் செய்யப்பட்டபோது தமிழரசுக் கட்சி அதில் சார்பாக இருந்தது. அதற்கான ஆதரவு கருத்துக்களை வழங்கினார் தர்மலிங்கம். ஆனால் அன்றும் கூட தமிழர் கருத்துக்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது. அதனை தொடரந்து நாம் வெளியேறினோம். கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் ஸ்சாசனத்தை நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுள்ளனர் என அரசு தெரிவித்தது. இதனை மறுத்த தந்தை செல்வா இது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு அரசியல் ஸ்சாஸ்திரம் என தெரிவித்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து தான் தனியாக போட்டியிடுவதாக தெரிவித்தார்.
தற்போது 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு நீக்கப்பட்டு புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரபடவேண்டும் என அனைத்து மக்களும் விரும்புகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் தர்மலிங்கம் முன்வைத்த கருத்துக்களே தற்போது எமக்கு தேவைப்படுகிறது. தர்மலிங்கம் போன்ற பல தலைவர்கள் தற்போது நம்முடன் இல்லை. அதனடிப்படையில் பல பொறுப்புக்களை நாம் சுமக்கிறோம். நமது மக்கள் பொறுமையாக இருக்கவேண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும்” என்று அவர் மேலும் அவர் தெரிவித்தார்.