திருகோணமலை களப்புக்கடலில் ஆயுதங்கள் மீட்பு-
திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள களப்புக் கடலில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பொலிஸாரின் உதவியுடன் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடல் பகுதியில் உள்ள இடமொன்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மீனவர்களின் வலையில் தொடர்ந்தும் ஆயுதங்கள் சிக்குவதினால் நேற்று கடற்பகுதியில் தேடுதல் நடாத்திய போது ரி56 ரக துப்பாக்கி, கைக்குண்டுள் -02 மற்றும் துப்பாக்கி ரவைகள் 535, புகைக்குண்டு 01, துப்பாக்கி பாகங்கள் போன்றனவும் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் கூறியுள்ளனர். இதனையடுத்து தொடர்ந்தும் கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கிளிநொச்சியில் கைதிகள் தினத்தை முன்னிட்டு அடையாள உண்ணாவிரதம்-
கிளிநொச்சியில் கைதிகள் தினத்தை முன்னிட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வலி.வடக்கு மீள்குடியமர்வுக்கு 3 மாதகால அவகாசம் தவறின் அத்துமீறிய மீள்குடியேற்றம்-
வலி.வடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அவர்கள் மீள்குடியேறுவார்கள் என வலி.வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலி.வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்பாடி விருந்தினர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பை நடாத்தியபோதே மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது, கடந்த டிசம்பர் மாதம் நலன்புரி முகாமுக்கு வருகைதந்த ஜனாதிபதி வலிவடக்கு மக்களை 6மாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது ஐந்து இடங்களை கையளிக்கமுடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை வாசிக்க…..அத்துடன் மீளக்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு 2பரப்பு காணியும் கவர்ச்சியான சலுகைகளும் நட்டஈடுகளும் தருவதாக கூறுகின்றனர். ஐ.நா. பொதுச்செயலர் யாழ் வந்தபோது மீளக்குடியேற்றப்பட வேண்டிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயினும் பான்கிமூன் அந்த மக்களை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். எனவே இனியும் அரசியல்வாதிகளை நம்பத் தயாரில்லை. நாம் எமது சொந்த மண்ணுக்கு செல்வதாக தீர்மானித்துள்ளோம். பலாலி அந்தோனியார் ஆலய எல்லைக்குள் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அங்கு கொட்டகைகள் அமைத்து குடியேறுவதென தீர்மானித்துள்ளோம். எனவே எமது இந்த செயற்பாட்டிற்கு மீள்குடியேற்ற மக்கள் சார்பில் இயங்கும் அமைப்புகள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
காட்டு யானை தாக்கி சிறுமி பலி, மற்றொரு சிறுமி காயம்-
மட்டக்களப்பு சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மாவடிவேம்பு 1ஐச் சேர்ந்த ரவீந்திரன் சர்மிலா (வயது 11), அவரது தங்கை ரவீந்திரன் தர்ஷிகா (வயது 9) ஆகியோர், தமது மாமாவுடன் ஈரக்குளம் இலுக்குப்பொத்தாணை கிராமத்துக்கு சைக்கிளில் சென்றுவிட்டு, சந்தனமடு ஆற்றுப் பகுதிக்கு அருகே உள்ள காட்டுப் பாதையூடாக மாவடிவேம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, குறித்த பாதைக்கு குறுக்காக வந்த காட்டு யானை, இவர்களை தாக்கியுள்ளது. சம்பவத்தில் சகோதரிகள் இருவரும் காயமடைந்த நிலையில். மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக சர்மிலா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். சிறு காயங்களுக்குள்ளான அவரது தங்கை தொடர்ந்து மாவடிவேம்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பியுள்ளார். ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் இருந்து சித்தாண்டி, ஈரக்குளம் போன்ற பகுதிகளில் காட்டு யானையின் தாக்குதலினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்-
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு நாடு திரும்பினர். சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் பிரதமர் நேற்று இரவு 11 மணியளவில் நாட்டை வந்தடைந்தார். இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூர் சென்றிருந்தனர். இந்து சமுத்திரத்தை பாதுகாக்க புதிய சட்டக் கட்டமைப்பொன்றின் அவசியம் குறித்து பிரதமர் ரணில்விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். தமது விஜயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 150ஆல் அதிகரிப்பு-
ஆரம்ப காலத்தில் பாரம்பரிய சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் சேவை, தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்ட இலங்கை பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொது மக்களுக்கு செயற்றிறன் உடைய சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உண்டென பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய இலங்கையிலுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் 150ஆல் அதிகரிக்கவுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.