இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்த – அஸாத் சாலி
மலேசியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். அத்துடன் தூதுவருக்கு எமது கவலையை தெரிவிப்பதோடு இந்த தாக்குதலையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷ் தான் சிங்கள மக்களின் தலைவர் என்றும் தான் செல்லும் நாடுகளில் தமிழ் மக்கள் தனக்கு பிரச்சினை ஏற்படுத்துவதாகவும் இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களுக்கு காண்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தூதுவருக்கு தாக்குதல் நடத்தியதில் இலங்கையர் எவரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள். அத்துடன் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த கே.பி.யை மலேசியாவில் இருந்து தான் கொண்டுவந்தார்கள். அதேபோன்று மஹிந்த செல்லும் இடமெல்லாம் உதயங்க வீரதுங்க செல்கின்றார். அப்படியிருக்கும்போது இந்த சம்பவம் இவர்களுக்கு தெரிவித்து செய்யப்பட்ட தாக்குதலாகவே தெரிகின்றது. அத்துடன் மலேசியாவில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதும் அவரின் சுவரொட்டிகள் மீது தாக்குதல் நடத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.
முப்படைகள், பொலிஸ் துறைகளில் தமிழர்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளப்படுவர் – பிரதமர் ரணில்
எதிர்காலத்தில் இலங்கை முப்படைகள் மற்றும் பொலிஸ் துறைகளில் தமிழர்களை கூடுதலாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யுத்தம் ஆரம்பித்த பின்னர் அரசு பாதுகாப்பு தரப்பில் கடமையாற்றிய தமிழ் அதிகாரிகள் விடுதலை புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த பிரதமர், இதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு தயக்கம் காட்டியதாக குறிப்பிட்டார். அதே போன்று யுத்தம் இனவாத ரீதியில் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு முன்வரவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு 206 தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக கூறிய அவர், இவர்கள் தற்போது வடகிழக்கு பிரதேசத்தில் கடமையாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்த பிரதமர் விரம்சிங்க, அரசாங்கம் அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமென்று மேலும் தெரிவித்தார்.
ஜிகா வைரஸ் 6 மாதத்துக்கு தாம்பத்தியம் கூடாது.
ஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. தற்போது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை கொசுவினால் இந்த நோய் பரவுகிறது.
இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 8 வாரத்துக்கு ஆணுறை பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என உலக சுகாதார நிறுவனம் மன்பு கூறி இருந்தது. ஆனால், இப்போது 6 மாதத்துக்கு அவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறியிருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த ஒருவர் ஜிகா வைரஸ் நோய் பாதித்த இடத்தில் இருந்து வந்திருந்தார். அவருடைய உயிரணுவில் 6 மாதத்துக்கு பிறகும் ஜிகா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, உலக சுகாதார நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிலருக்கு ஜிகா வைரஸ் தாக்கினால் அது வெளியே தெரிய வரும். சிலருக்கு அறிகுறியே தெரியாது. எனவே, நோய் பாதிப்பு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக 6 மாதத்துக்கு உடல் உறவை தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது
காவிரி நீர் திறந்துவிட்டமைக்கு எதிர்ப்புதெரிவித்து கர்நாடகாவில் எதிர்ப்புப் போராட்டம்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. மண்டியா, மைசூர் மற்றும் பெங்களூரு உள்பட பல இடங்களிலும் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
ஜெயலலிதா மற்றும் சித்தராமையா உருவபொம்மை எரிப்பு , ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் பெண்களும் பங்கெடுப்பு, தமிழ் திரைப்பட பேனர்களை அகற்றி ஆர்ப்பாட்டம்
முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது.