உடுவில் மகளிர் கல்லூரியில் ஆறு போராட்டத்திற்கு கிடைத்த அமைதியான தீர்வு உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மல்லாகம் மாவட்ட நீதவான் யூட்சன் மற்றும் மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் குறித்த விடயத்தில் தலையிட்டு தீர்த்துவைத்துள்ளனர்.
கல்லூரிக்கு விரைந்த நீதவான் கல்லூரியின் அதிபராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த சிரானி மில்ஸ், கல்லூரியின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சனீதா பற்றீசியா ஜெபரட்ணம், மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தமது நியாயப்பாடுகளை மல்லாகம் நீதவானுக்கு தெரியப்படுத்தியதுடன், தமக்கு நேர்ந்த சித்திரவதைகளைக் கூறி நீதவானின் காலில் விழுந்தும் அழுதுள்ளனர்.சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக நீடித்த இந்தக் கலந்துரையாடலின் போது இதுவரை காலமும் பதவி வகித்து வந்த அதிபரான சிரானி மில்ஸ் மாணவிகளின் சுபீட்சமான எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தான் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மாணவிகள் மீது தாக்குதல் நடாத்தியவர்களைக் கடுமையாக எச்சரித்த நீதிபதி எதிர்வரும் காலங்களில் மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ அல்லது கல்லூரி நிர்வாகத்திற்குள் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ நீதிமன்றம் தலையிட வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார்.
மாணவிகள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதிபரின் பெருந்தன்மையையும், நீதவானின் கருத்துக்களையும் கவனமாக செவிமடுத்த மாணவிகள் தமது போராட்டத்தைக் கைவிடுவதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.