இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்தே, மது விற்பனையின் மூலம் அதிக அளவு வருமானம் அரசுக்குக் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாள்தோறும் நூறு பேர் போதைக்கு ஆளாகி மரணமடைவதாகத் தெரிவித்திருக்கிறார்.
மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் நேரடி கண்காணிப்பில் போதையில் இருந்து விடுதலையான நாடு எனும் கருப்பொருளில் மது மற்றும் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் திட்டத்தின் எட்டாவது மாவட்ட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு போதையிலிருந்து விடுதலையான நாடு என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.
அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து பேசுபவர்கள் குறைபாடுகள் இருந்தாலோ, தேவைகள் நிறைவேற்றப்படாவிட்டாலோ வீதியில் இறங்கி போராட்டம் நடத்துக்கின்றார்கள்.
ஆனால் அரசியல்வாதிகளோ மற்றவர்களோ எவரும் சமூகத்திற்குக் கேடு விளைவிக்கின்ற தேவையற்ற போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதில்லை என்றார்.
போதைப்பொருள் ஒழிப்புக்காகச் செயற்பட்டு வருகின்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இதற்காக போராடி வருகின்றார்கள் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் 70-க்கும் மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் செயற்படுகின்றன. மது விற்பனையின் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்தே அரச திறைசேரிக்கு அதிக அளவில் பணம் வந்து சேர்கின்றது. போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையால் யாழ் மாவட்டத்தில் மிகவும் மோசமான சமூகப் பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன என்றார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இந்த நிகழ்வில் போதைப் பொருள் ஒழிப்பிற்காகச் செயற்பட்டு வருகின்ற காவல்துறையினர் மற்றும் சிவில் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய கட்டடத்தையும் திறந்து வைத்தார்