maithripala01வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தீர்ப்பது குறித்து, வட மாகாண முதலமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆராய்ந்து, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்திருக்கின்றார்.

யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டபோது, வட மாகாணத்தின் மிகப் பெரிய குளமாகிய, இரணைமடுக்குளத்தின் குளக்கட்டமைப்பை புனரமைக்கும் பணியில் பல்வேறு திணைக்களங்கள் தலையிட்டு, புதிய புதிய பிரச்சினைகளைக் கிளப்பி வருவதாக வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.குளத்தில் இருந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு புனரமைப்புப் பணிகளை வருகின்ற மாரி காலத்திற்கு முன்னர் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும் சுற்றுச்சூழல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, கனிம வளங்கள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் இந்தப் பணிகளில் தலையிட்டு தடைகளை ஏற்படுத்தி வருகின்றன என முதலமைச்சர் விக்னேஸ்னரன் சுட்டிக்காட்டினார்.

மாரி காலத்திற்கு முன்னர் இரணைமடுக்குளத்தின் குளக்கட்டமைப்பை புனரமைக்கும் பணிகள் முடிவு பெறாவிட்டால், காலபோகத்தின் போது 25 ஆயிரம் ஏக்கர் காணிகளில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து, இந்த விடயம் குறித்து உடனடியாகக் கவனம் செலுத்தப்படும் என்றும், வடமாகாண முதலமைச்சர் மற்றும் முக்கிய உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றைக் கூட்டி நிலைமைகளை ஆராய்ந்து தடைகளை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி வட மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்குப் பதிலளிக்கையில் உறுதியளித்துள்ளார்