maithripalaஇலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு சம்பந்தமாக தவறான பிரசாரங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊடக நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வது வருடாந்திர மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர்.இந்த பின்னணியில் சம்பந்தப்பட்ட மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, தான் ஜனாதிபதியாகுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய பங்களிப்பு வழங்கியதாக தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் ஐ.நாவினால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க முடியாதமை காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ திடீர் தேர்தல் ஒன்றை நடத்தி தோல்வி கண்டதாக ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்று சேர்ந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் இந்த சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டை காக்க நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்தார்.

சகல மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஆளும் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன அது சம்பந்தமாக சில குழுக்கள் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
இவ்வாறு தவறான பிரசாரங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மேலும் வேண்டுகோள் விடுத்தார்.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க உள்பட அந்த கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர.;