indiaகாவிரி நீர்ப்பங்கீடு தொடர்பிலான இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பல பகுதிகளில் வன்முறைகள் தொடர்கின்றன. பெங்களூரில் இரண்டு இடங்கில் வன்முறைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த 50ற்கும் அதிகமான தனியார் பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் அமுல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு நாளைவரை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. காவிரி நீர் விவகாரம் தொடர்பில் கர்நாடகா தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது காவிரியில் இருந்து தமிழகத்துக்கு எதிர்வரும் 18ம் திகதிமுதல் 20ம் திகதிவரை 12000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பாரிய வன்முறைகள் வெடித்துள்ளன. கர்நாடகாவில் ஆர்பாட்டக்காரர்கள் 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் கர்நாடகா அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் தமிழகத்துக்கான அனைத்து பஸ் சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.