white-vanயாழில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக ஆஜராகி, பின்னர் வெளியில் வரும்போது மூவரை, வெள்ளை வேனில் ஏற்றிச் சென்றுள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் இளைஞர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை வேனில் வந்த கொழும்பு குற்றப்பிரிவினர் இன்று இவர்களை பிடித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று யாழ். நீதிமன்றில் இடம்பெற்றது. குறித்த வழக்கு விசாரணைக்காக 74பேர் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இதேவேளை, வழக்கிற்கு சமூகமளிக்காத நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் வழக்கு விசாரணையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதிக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் ஒத்திவைத்துள்ளார்.வழக்கு நிறைவடைந்த பின்னர், 74பேரும் நீதிமன்றத்திற்கு வெளியில்வரும் போது, கொழும்பு குற்றப் பிரிவினர், நீதிமன்றத்தின் முன்பாக வைத்து, கேதீஸ்வரன், அஜந்தன், அகிலன் ஆகிய மூவரை வெள்ளை வேனில் பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த மூவரையும் பிடிக்கும்போது, ஏன் பிடிக்கின்றீர்கள் என மற்றவர்கள் வினவியபோது, விசாரணைக்காக பிடிப்பதாக அந்த வேனில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஏனையவர்கள் அந்த இடத்தில் இருந்து பாய்ந்து ஓடியதனால், அங்கு பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.