bangladeshபங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ_ம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவை அழைத்து இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் கம்ரூல் அஷன், என்ன காரணத்திற்காக ஒன் அரைவல் வீசா நிறுத்தப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தான் இதுபற்றி அறிந்திருக்கவில்லை எனவும், தனது நாட்டு வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு விடயத்தை அறிந்து வந்து மீண்டும் சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் செய்தியாளர் ஒருவருக்கு கருத்து வெளியிட்டுள்ள யசோஜா, பங்களாதேஷ் பிரஜைகளை இலங்கை எப்போதும் மதிப்பதாகவும், அவர்கள் இலங்கைக்கு வருவதை இந்த நாடு வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.