566அம்பாறை ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச செயலாக்கப் பிரிவுக்குட்பட்ட 2000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்றப்பட்ட வயல் காணிகளை, வனவள அதிகாரிகள் நில அளவை செய்து சுவீகரிக்கும் செயற்பாட்டைக் கண்டித்து இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள 6 கண்டங்களான தோணிக்கல், டிப்பமடு, பெரியதுலாவை, தோணிக்கல் மேல் கண்டம், தென்கண்டம், வடகண்டம் ஆகிய பிரதேசங்களின் 2000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் காணிகளை சவீகரிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இப் பிதேசத்தில் 1962ம் ஆண்டுக்கு முன்னர் சேனைப் பயிர்ச்செய்கை செய்துவந்துள்ளதாகவும், பின்னர் வயல்காணிகளாக மாற்றப்பட்டு வேளாண்மை செய்து வருவதாகவும், பன்னலகம குளத்தினூடாக நீர்ப்பாசனம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1969 ஆண்டு காணிக் கச்சேரியூடாக இக் காணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். இதன்பின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவினால் ஜயபூமி காணி உறுதி பத்திங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2010-10-01ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த எல்லைக்குட்பட்ட காணிகள் வன இலாகாவுக்குச் சொந்தமானதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிவித்தலுக்கு பின்னர், குறித்த காணிகள் சட்டரீதியாக அளவீடு செய்யப்படாமலும், காணி உரிமையாளர்களுக்கும் பிரதேச செயலகத்திற்கும் அறிவிக்காமலும், இக்காணிகளை வனவள திணைக்களம் சுவீகரிப்பதற்கு எல்லைக் கல்நாட்டி வருவதுடன், எங்கள் காணிகளில் வேளாண்மை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.