weerகிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியில் 278ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது வேனில் பயணித்த எட்டு பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இதன்படி நெல்லியடி பகுதியின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.பசுபதி (வயது 78), ப.பொன்னம்மா (வயது 75), ப.நந்தமூர்த்தி (வயது 43) ஆகியோரும், அவர்களின் உறவுக்கார பெண்ணான 55வயது மதிக்கத்தக்க ஒருவரும் பலியாகியுள்ளனர். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் வேனில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன், பஸ்ஸில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீதவான் விசாரணைகளின் பின் சடலங்கள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் கொழும்பு வெள்ளவத்தைக்கு சென்று திரும்பி செல்கையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வேனின் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டுள்ளமை மற்றும் இரண்டு வாகனங்களும் அதிக வேகத்தில் பயணித்துள்ளமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் மேலும் கூறுகின்றனர். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.