கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 100ற்கும் மேற்பட்ட கடைத்தொகுதிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் பாரிய சொத்தழிவுகளும் ஏற்பட்டுள்ளன.
நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் பழக்கடைகள், புடவைக் கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளன. தீ பிடித்து எரியத் தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நீர்த்தாங்கி மூலம் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்கிளும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ புடவைக் கடைகளையும் அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. யுத்த அழிவுகளுக்குப் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமது வாழ்க்கைச் செலவுக்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் தற்காலிக கொட்டில்களில் வியாபாரம் செய்கின்ற நிலையில் இந்தப் பேரனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை இருந்திருக்குமாயின் ஒரு சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.