sddfயாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், யாழ். மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவது மற்றும் வீதி விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. தீர்வு காணப்படாமலுள்ள பல்வேறு குற்றச்செயல்களை விரைவுபடுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பது தொடர்பிலும் சட்டம் ஒழுங்கை முழுமையான முறையில் மாவட்டத்தில் நிலைநாட்ட ஏதுவான சூழலை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மாவட்ட சிவில் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜெயசுந்தர, வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் மற்றும் மாவட்ட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் சிவில் அமைப்புகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.