தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரசாயன ஊசி விவகாரம் தொடர்பான பரிசோதனைகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தயக்கம் காட்டி வருவதாக வட மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, அது குறித்த யோசனை ஒன்று வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இவர்களை வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டது. பிரதேச சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதன் முதற்கட்டமாக முன்னாள் போராளிகளின் வைத்திய அறிக்கையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் அந்த வைத்திய அறிக்கையை வழங்க முன்னாள் போராளிகள் பலர் மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் சில முன்னாள் போராளிகள் தமது வைத்திய அறிக்கையை வழங்கியுள்ள போதும் அவர்கள் மேலதிக பரிசோதனைக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் வட மாகாண சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் இந்த பரிசோதனை நடவடிக்கையினை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.