dss ere potus_phone_toutநியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைமையகத்தில் நடைபெற்றுவரும் பொதுச்சபையின் 71வது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் ரேண்புல்லுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இந்த இருதரப்பு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தன்னுடைய நன்றியினைத் தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர், தமது அரசாங்கமானது மிகுந்த வெளிப்படையான மனிதாபிமான கொள்கைகளை கொண்டுள்ளது எனவும் உண்மையான குடியேற்றவாசிகளை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சில குற்றவாளிக் குழுக்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்நிலை அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரமல்லாது முழுப் பிராந்தியத்திற்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் இலங்கை தனது பூரண ஒத்துழைப்பை தமக்கு வழங்குவது தொடர்பில் தனது மகிழ்ச்சியினையும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம்.ஜே.அக்பரும் மைத்திரிபால சிறிசேனவை நியூயோர்க்கில் வைத்து சந்தித்தார். இதன்போது அண்மையில் கஷ்மீரில் இடம்பெற்ற வன்முறையினால் பலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை மக்களின் சார்பிலும் அனுதாபங்களைத் தெரிவித்த ஜனாதிபதி, பிராந்தியத்திலுள்ள அனைவரும் இவ்வாறான வன்முறைகளை இல்லதொழிப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ் இருதரப்பு சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இரு அரசாங்கங்களும் மனிதாபிமான முறையில் இப்பிரச்சினையை பார்க்கவேண்டும் என கூறிய ஜனாதிபதி, சட்டவிரோதமாக எல்லைதாண்டும் மீனவர்கள் கைதுசெய்யப்படும்போது அவர்களை சாத்தியமான வழிகளில் விரைவாக விடுதலை செய்வதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை எல்லைதாண்டி மேற்கொள்ளப்பட்டுவரும் மீன்பிடி நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளங்களில் ஏற்படும் நீண்டகால பாதிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வடக்கின் மீனவர்களும் கவலையடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஆகவே மீனவ சமூகத்தினரை உள்ளடக்கி இப் பிரச்சினைக்கான ஆரம்பத் தீர்வுகளை விரைவாக கண்டறியவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு இந்திய மத்திய அரசின் உதவியினை அவர் வலியுறுத்தினார். இதேவேளை, ஐநாவின் பொதுச் செயலாளராக தனது இறுதி உரையியை நிகழ்த்திய பான் கீ மூன் இலங்கை மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதியாக பரக் ஒபாமா அவர்களும் தனது இறுதி உரையினை ஐநா பொதுச்சபையில் நிகழ்த்தியிருந்தார். உலகலாவிய ரீதியாக இடம்பெற்றுவரும் பயங்கரவாத நடவடிக்கைகளை வன்மையா கண்டித்த அமெரிக்க ஜனாதிபதி, இவ் அச்சுறுத்தலுக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பிற்கும் அழைப்பு விடுத்தார்.

இது இவ்விதமிருக்க அமெரிக்காவின் மில்லேனியம் சலேன்ஜ் கோப்ரேசன் நிறுவனம் தன்னுடைய ஆரம்ப நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையினை தெரிவுசெய்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தனா ஜே ஹைடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று நியூயோர்க்கில் வைத்து சந்தித்தார்.

2016 டிசம்பரில் இடம்பெறவுள்ள மில்லேனியம் சலேன்ஜ் கோப்ரேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ள செயலாக்க அறிக்கையினை தயாரிப்பதற்காக தம்முடைய குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் செயற்திட்டங்கள் எவை என்பது தொடர்பில் பணிப்பாளர் சபை அறிக்கை சமர்ப்பிர்க்கப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்ட ஹைடி, புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக முன்னெடுக்கும் பல செயற்திட்டங்களுக்கு தமது நிறுவனம் உதவியளிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்காக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றும்போது உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் ஹோட்டலில் நேற்று மாலை, இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பில் கூடிய அவதானத்தை செலுத்தவுள்ளதுடன், தான் முன்னெடுத்துவரும் போதைப்பொருளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் பொதுச்சபையில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன நிகழ்விலும் கலந்துகொண்ட ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்களுடன கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இலங்கையில் தெளிவான மாற்றம் ஒன்று தென்படுகின்றது என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இதன்போது தெரிவித்தார். அதேவேளை, பான் கீ மூன், இலங்கையின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் தன்னிடம் வாழ்த்துத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை தொடர்பில் எல்லோருமே பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, அவர்களுடைய இந்தச் சாதகமான பிரதிபலிப்புக்கள் தொடர்பில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

தற்போது எந்தவொரு நாடும் இலங்கையுடன் வெறுப்புடனோ அல்லது பகைமையுணர்வுடனோ இல்லையெனவும் அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கூடிய சாதகமான நிலைப்பாட்டுடனேயே உள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, உலகத்தலைவர்களுடைய இந்த சாதகமான நிலைப்பாட்டை இலங்கைக்கு திரும்பிச் செல்லும்போது தான் எடுத்துச் செல்வேன் எனவும் மேலும் தெரிவித்தார்.

உலக வெப்பமயமாதல் தொடர்பான பாரிஸ் பிரகடனத்துக்குப் பல நாடுகள் ஒப்புதல் அளித்தமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைந்திருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும், பொருளாதார ரீதியில் பலம்மிக்க தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன விருந்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தபோதே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இராப்போசன விருந்துக்கும் ஜனாதிபதிக்கு விசேட அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐ.நா சபையின் பொதுச்சபையில் உரையாற்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, மாநாட்டில் உரையாற்றிய அவர், பயங்கரவாத செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள அதேநேரம் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு பூகோள ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.