dumindaகடந்த 8ஆம் திகதி தனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்து, சகல குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேன்முறையீடு செய்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலைசெய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக கடந்த 20 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டு மனுவை முன்வைப்பதற்காக தமது சட்டத்தரணிகள் ஊடாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தமது மனுவை ஒப்படைத்திருந்தனர். அநுர துஷார டி மெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவீ ஜயநாத், சரத் பண்டார, ஆகியோரே மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். தமக்கு வழங்கப்பட்ட மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டத்துக்கு முரணானது எனவும் தம்மை விடுவிக்குமாறு கோரியும் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், துமிந்த சில்வாவும் மேன்முறையீடு செய்துள்ளார். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு எம்.பியாகச் செயற்பட்டவருமான துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை கடந்த 8ஆம் திகதி விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.