தங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் தாய்மார்கள், கட்டாயமாக சேலை அணிந்திருக்க வேண்டுமென்று, அப்பாடசாலைகளின் அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, உடனடியாக நீக்கிக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பாடசாலை அதிபர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் சுற்றறிக்கையொன்றை அனுப்புமாறு, கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ‘கொழும்பு உள்ளிட்ட, நகரப் பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பாலான தாய்மார்கள், தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அவர்கள், தங்களது வேலைத்தளங்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர். பாடசாலைகளுக்கு வந்துவிட்டு, மீண்டும் தொழிலுக்குச் செல்பவர்கள், இந்த ஆடைப் பிரச்சினையால், பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதனால், பாடசாலையொன்றுக்குள் செல்லும் போது, அதற்கேற்ற மரியாதையுடன் கூடிய ஆடைகளை அணிந்துச் செல்லுமாறு, தாய்மாரைக் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், சேலை அணிந்து தான் பாடசாலைக்கு வருகை தரவேண்டும் என்று, பாடசாலை அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, நீக்கிக் கொள்ளுமாறு, பாடசாலை அதிபர்களுக்கு சுற்றறிக்கையொன்றை அனுப்பவுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.