tharunjith-singh-santhuஇலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக தரன்ஜித் சிங் சாந்து (53) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நேற்று பிறப்பித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் உயர்ஸ்தானிகராக பணியாற்றிய வை.கே. சின்ஹாவின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது.

இதைத் தொடந்து, இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் நியமிக்கப்பட்டுள்ளார். 1963 ஜனவரி 23ஆம் திகதி பிறந்த தரண்ஜித் சிங் சாந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து, 1988ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார துறையில் இணைந்துகொண்டுள்ளார். 2000ம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையான காலத்தில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் அரசியல் ஆலோசகராக தரண்ஜித் சிங் சாந்து பதவிவகித்துள்ளார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளுக்கான முதுகலைப் பட்டம் முடித்த அவர், ரஷ்யாவில் (1990-92) இந்திய தூதரக அரசியல், வர்த்தகப் பிரிவு அதிகாரியாக பணியாற்றினார். 1997ம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூரகத்தில் அரசியல் பிரிவு செயலராக நியமிக்கப்பட்டார் தரண்ஜித் சிங் சாந்து. 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதன் விளைவாக இந்தியாவுக்கு எதிராக பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்திருந்தது. அத்தடையை நீக்குவதற்காக தனது தூதரகம்மூலம் இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கான குழுவில் தரன்ஜித் சாந்து முக்கிய நபராக விளங்கினாரென கூறப்படுகின்றது.