ஏறக்குறைய 60 வருடங்களாக சாத்வீகத்தில் ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும் என புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணி நிறைவுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“எழுக தமிழ்” பேரணி யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஒரு அணியாகவும், பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்னொரு அணியாகவும் புறப்பட்டு, பேரணிகள் இரண்டும் பலாலிவீதி இலுப்பையடிச் சந்தியில் ஒன்றாக இணைந்து கே.கே.எஸ் வீதியினூடாக வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளியை அடைந்தது. தமிழ் மக்கள் பேரவையினர், மத குருமார்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் பேரணியாக இப்பேரணி இடம்பெற்றது.
பேரணியின் நிறைவுப் பொதுக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியக் கலாநிதி பூபாலன் லக்ஸ்மன் மற்றும் திரு. வசந்தகுமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கும், முப்பதினாயிரம் மக்களுக்கும் தனித்தனியாக முகம் கொடுத்து சிரம்தாழ்த்த முடியாத காரணத்தினால் அனைவரையும் ஒட்டுமொத்தமாக சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். இன்று மக்களுடைய சரித்திரத்திலே ஒரு மிகப்பெரிய சாதனையென்றே கூறவேண்டும், நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய அளவிலே தங்களுடைய அடிப்படை உரிமைகளை என்றுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக மிக உரத்த குரலிலே கூறியிருக்கின்றார்கள். எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த சுட்டெரிக்கும் வெய்யிலிலும் இங்கு நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுடைய குரல்கள், சர்வதேசத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், அரசுக்கும் மிகத் தெளிவாகக் கேட்கும்.
எங்களுடைய அடிப்படை நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கும்வரை ஏறக்குறைய 60 வருடங்களாக சாத்வீகத்தில், ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும். அப்படியான ஒரு வெற்றியை எடுப்பதன்மூலம்தான் ஆயிரக்கணக்கான தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்த அனைத்தியக்க போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாங்கள் மிகப்பெரிய அஞ்சலியை செலுத்தியவர்களாக இருப்போம். அதை நாங்கள் எல்லாரும் தொடர்ந்து சென்று செய்வோம் என்றுகூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.
மேலும், ‘எழுக தமிழ்’ பேரணிக்கு, யாழ். நகரம் முழுவதிலும் உள்ள கடைகள் பூட்டப்பட்டு, மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர். இதன்படி யாழ் நகரபகுதியில் உள்ள வர்த்தக மற்றும் வியாபார நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், சந்தைகள் என அனைத்தும் பூட்டப்பட்டப்பட்டிருந்தன.
வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் பேரணியில் கலந்துகொள்வதற்காக மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.