accident (12)திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்ற தனியார் பஸ்ஸொன்று, நிக்கவெள பகுதியிலுள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேர், அநுராதபுரம், ஹொரவ்பொத்தானை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த 9 பேர் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் ஏழு பேர், மேலதிக சிகிச்சைகளுக்காக, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விபத்துக்குள்ளானவர்கள் பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் எனவும் திருகோணமலையிலுள்ள தமது உறவினர்களைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், பஸ்ஸில் 18பேர் பயணித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.