1998ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், அச்சுவேலியிலிருந்த இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் சிலர், பொதுமக்கள் இருவரை சுட்டுப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த இராணுவ வீரர்கள் 11 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், நேற்று உத்தரவிட்டார்.
அந்த 11 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டு, அவர் இப் பிடியாணையை பிறப்பித்துள்ளார். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய இராணுவவீரர்கள் ஐவரையும் எதிர்வரும் 10ஆம்திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு, யாழ். நீதவான் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, நீதவான், அச்சுவேலிப் பொலிஸாருக்கு மேற்கண்டவாறு கட்டளையிட்டார். 1998ஆம் ஆண்டு அச்சுவேலியிலிருந்த இராணுவ முகாமில் கடைமையாற்றிய இராணுவ வீரர்கள் சிலர், அவ்வாண்டு ஜனவரி 20ஆம் திகதி அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து, அவர்கள்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்ததாக, இராணுவப் பொலிஸாரினால், அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டுக்கமைய அச்சுவேலிப் பொலிஸாரினால், சட்டமா அதிபருக்கு அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம், குற்றவியல் தண்டனைக் கோவைச்சட்டத்தின் 296ஆம் பிரிவின் பிரகாரம் வழக்குத் தாக்கல் செய்யுமாறு, அச்சுவேலிப் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தது. பின்னர், அச்சுவேலிப் பொலிஸாரின் ஊடாக, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அச்சுவேலி இராணுவ முகாமிலில் அப்போது கடமையாற்றியவர்களில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 16 பேரையும் 26ஆம் திகதி நேற்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. எனினும், அந்த 16 பேரில் ஐவர் மட்டுமே நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். ஏனைய 11 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், மனிதப் படுகொலை தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையால், ஏனைய ஐவருக்கும் பிணை வழங்க முடியாதெனத் தெரிவித்ததுடன், அவர்களை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.