anurathapuram-jailதமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து, கடந்த ஒருவாரமாக முன்னெடுத்திருந்த தொடர் உண்ணாவிரதத்தை அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று கைவிட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நீதியமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், தமது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்ற வரம்பிற்குள் மாற்றுமாறும் கோரிக்கை விடுத்து அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 21ஆம் திகதிமுதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலைமையின் கீழ், அவர்களின் கோரிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நீதியமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இன்று நண்பகலுடன் தங்களின் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு கைதிகள் உணவு உட்கொண்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி கைதிகள் இதற்கு முன்னரும் பல்வேறு தடவைகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது கோரிக்கைகள் அடங்கிய மஹஜரொன்றை கடந்த மாதமளவில் ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனுப்பியிருந்தனர்.