sarath fonsekaஇராணுவத் தளபதியாகவிருந்த தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய, அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரியுள்ளார்.

லங்காதீப வாரஇதழுக்கு அளித்த செவ்வியில் அவர், 2009ஆம் ஆண்டு பிரபாகரன் கொல்லப்பட்ட பின், அவரது அடையாள அட்டையையும், அடையாளத் தகட்டையும், கொழும்புக்கு அனுப்புமாறு நான் மேஜர்ஜெனரல் கமால் குணரத்னவுக்கு உத்தரவிட்டேன். எனினும், அவை கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டதா என்பதை என்னால் அறிய முடியவில்லை. பிரபாகரனின் அடையாள அட்டையை மேஜர்ஜெனரல் கமால் குணரத்னவே வைத்திருக்கிறார் என்பதை அவர் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்திய பின்தான் எனக்குத் தெரியும். அதனை இராணுவ அருங்காட்சியகத்துக்கு வழங்கப்போவதாக அவர் கூறியிருக்கிறார். பிரபாகரனின் அடையாள அட்டையை, கொழும்புக்கு அனுப்புமாறு நான் உத்தரவிட்ட பின்னரும் அதனை அவர் எவ்வாறு வைத்திருக்க முடியும்? இந்த ஒழுக்க மீறலுக்கு எதிராக, மேஜர்ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய இராணுவத் தளபதியிடம் கோரவுள்ளேன்.

நந்திக்கடலுக்கான பாதை நூலில், பிரபாகரனின் உடலை ஒரு குழந்தையாலும் அடையாளம் காணமுடியும், என மேஜர்ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதனை ஆதாரத்துடன் செய்யவேண்டியிருந்தது. இராணுவத்திலிருந்த எவருமே பிரபாகரனை நேரில் கண்டதில்லை. அதனால் தான் பிரபாகரனின் உடலை அடையாளம்காண கருணாவை அனுப்பிவைத்தேன்.

அது மாத்திரமன்றி, பிரபாகரனின் உடல் மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார்.