mahindananthaவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் நிதி திரட்டியமை மற்றும் அந்த நிதியைப் பயன்படுத்தி சொத்துக்களை கொள்வனவு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர், 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் இன்று விடுவிக்கப்பட்டார். இதேவேளை, மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியில் விளையாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று வழக்குத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட புதுக்கடை நீதவான் நீதிமன்றம், ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.