தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் ஆரம்பமானது.
தகவல் அறிதல் மற்றும் ஊடக புனர்நிர்மாணம் என்ற தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த மாநாட்டில் தெற்காசிய வலயம் மாத்திரமல்லாது ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் ஆகிய அனைத்திற்கும் ஊக்கமளித்து, பாதுகாக்கும் நாடு என்ற ரீதியில் தகவல் அறியும் உரிமையும் நாட்டின் அனைத்து பிரிவுகளிலும் திறக்கப்பட வேண்டும் என இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்துவது குறித்து நீண்ட காலமாக அரசியல் மேடைகளிலும், சிவில் சமூக அமைப்புக்களிலும், மக்களிடமும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன எனவும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் கவனத்தில் கொள்ளப்படாத இந்த விடயத்தை தற்போதைய அரசாங்கத்தால் செய்து முடிக்கக் கூடியதாக இருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.