nalliah_kumaraguruparanபூமி புத்திரர்கள் என்னும் கோட்பாடு இலங்கை பிரஜைகளுக்கு ஏற்புடையதல்ல. சிங்களவராயினும், தமிழராயினும், முஸ்லிம்களாயினும் இலங்கையர் அனைவரும் வந்Nதுறு குடிகள் என்பதில் உண்மை உண்டு. இதை புரியாது 1000 வருடம் கடந்த தமிழர் வரலாற்றை அறியாத கலேகொட அத்தே ஞானசார தேரர் சகல தமிழர்களும் இந்தியா செல்ல தயாராக வேண்டும் என்று சொல்வதன் மூலம் தமது வரலாற்றையே அறியாது பேசுகின்றார்.

வங்கத்திலிருந்து வந்த விஜயன் குவேனியோடு வாழ்ந்து பெற்ற பிள்ளைகள் யார் என்பதையும் பின்னர் மதுரையிலிருந்து தமிழ் அரச பரம்பரையின் அரசியை மணந்து கொண்டார் என்பதும் வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியும். ஆனால் இதை அறியாதவர் போல் ஞானசார தேரர் தமிழர்களை இந்தியா செல்லத் தயாராக வேண்டும் என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அப்படியானால் ஞானசார தேரர் போன்றவர்கள் வங்கத்திற்கோ மதுரைக்கோ தான் செல்ல தயாராக வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மேல்மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழ் மக்களை விக்னேஸ்வரன் மீண்டும் போருக்கு கூட்டிச் செல்கின்றார் எனும் ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தும் அரசை கவிழ்க்கும் சதியில் முதலமைச்சர் எனும் ஐக்கிய தேசிய கட்சியின் பா.உ நளின் பண்டாரவின் கருத்திலும் எதுவித உண்மையும் கிடையாது. எழுக தமிழ் இப்படிப்பட்ட சின்னத்தனமான நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக நான் கருதவில்லை. இப்படியான கருத்துக்கள் வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு இனவாதம் பேசுவதற்கு வழியை எற்படுத்தியிருக்குமானால் அதற்காக வாய்மூடி மௌனிகளாக ஒரு சமுதாயமும் இருக்கவும் முடியாது.

மேலும், இன்று நல்லாட்சியில் அனைவரும் ஜனநாயக உரிமைகளாடு வாழக்கூடிய சூழலில் தமிழர்கள் யாரையும் சீண்டிப்பார்க்க நினைக்கவில்லை. நினைத்ததும் இல்லை சீண்டிப்பார்க்கவும் இல்லை. ஆனால் வரலாற்றில் தமிர்களை சிங்களவர்கள் சீண்டிய நிகழ்வுகளே அதிகம். அவற்றின் விளைவுதான் 1956 முதல் இன்று வரையான இனக்கலவரங்களும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளும் ஆகும். ஆனால் இன்று நிலைமை அதுவல்ல. எழுக தமிழ் நிகழ்வு அரசுக்கு எதிரான ஒரு போராட்டமோ அல்லது வேறு எவரையும் சீண்டிப் பார்க்கும் நோக்கம் கொண்டதல்ல. தமிழ் மக்களின் அபிலாஷைகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே அடையப்பட முடியும் என்பதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய பிரதமர் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்.

அதேபோல் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களும் பல பிரச்சினைகளுக்குமான தீர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் எடுத்துக் கூறி வருகின்றார். ‘எழுக தமிழ்” என்பதைக் கூட சொல்வதற்கு இந்நாட்டிலே தமிழர்களுக்கு உரிமை இல்லையானால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை எப்படி அடைய முடியும். ‘எழுக தமிழ்” சிங்கள, முஸ்லிம், மக்களுக்கு எதிரானதோ அல்லது அரசாங்கத்திற்கு எதிரானதோ ஒன்றல்ல. இதனை சீ.வி விக்னேஸ்வரன் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார். திட்டமிட்ட பௌத்த, சிங்கள இனவாத சக்திகள் தான் எழுக தமிழையும் சி.வி விக்னெஸ்வரனையும் இனவாதிகளாக காட்ட முயல்கின்றனர். தமது வங்குரோத்து அரசியலை கொண்டு செல்வதற்கு எழுக தமிழை பயன்படுத்த முயல்கின்றனர். சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் இயல்பாகவே ஒரு இனவாதியோ பௌத்த எதிர்ப்புவாதியோ அல்ல என்பது மட்டுமல்ல ஆன்மீக சிந்தனை கொண்டவர். அவரிடம் அஹிம்சை குடிகொண்டிருக்கின்றது. அவர் பௌத்த சிங்கள சமுதாயத்தோடு பன்னெடுங்காலம் கொழும்பில் வாழ்ந்து சவுஜன்யமான உறவை கொண்டிருப்பவர். பாசம் மிக்க இரு மருமகள்மாரை சிங்கள சமுதாயத்திடமிருந்து பெற்றுக் கொண்டவர். அவரை இனவாதியாக சித்தரிப்பது முறையற்றதாகும்.

முதலமைச்சர் என்னும் வகையில் தமிழ் சமதாயத்தின் பாரிய ஆதரவோடு தமிழர் தலைவரான அவர் தமிழ் மக்களுடைய உணர்வினை அரசியலில் பிரதிபலித்து வருவது அவரது தார்மீகக் கடமை. அவர் இன்று கூறுவதெல்லாம் அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை ஆணித்தரமாக எடுத்துரைத்த விடயங்கள் தான். எனவே எதனையும் இதுவரை அடையப்பெறாத அரசியல் தீர்வு எதிர்ப்பார்ப்பிற்காக தமிழர் தம் வரலாற்று ரீதியாக எடுத்தியம்பும் அபிலாஷைகளை பற்றி பேசுகின்ற உரிமையை அடகு வைத்து விட முடியாது. ஒரு இனம் தனது சுதந்திரத்தை தன்மானத்தை அடகு வைத்துத் தான் வாய் மூடி மௌனியாக அரசியல் தீர்விற்காக காத்திருக்க வேண்டும் என்றால் அதனை யாமார்க்கும் குடியல்லேம் என்று கூறவல்ல தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனை போராட்டம் என்றோ பிரிவினைவாதம் என்றோ திரிபு படுத்துவது தவறாகும். அப்படியான ஒரு நோக்கம் சி.வி விக்னேஸ்வரனுக்கோ ஏனைய ஏற்பாட்டாளர்களுக்கோ கிடையாது.

எனவே 30 ஆண்டுகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு சுதந்திர சுவாச காற்றை வெளிக்கொணர்ந்தது தான் எழுக தமிழ். இந்த நிகழ்வில் சி.வி விக்னேஸ்வரன் பேசியவற்றை சில சமயங்களில் சிங்கள ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றன. அதன் வெளிப்பாடும் திட்டமிட்ட சில பௌத்த சிங்கள இனவாத சக்திகள் இதனை பயன்படுத்தியதும் தான் இன்று விக்னேஸ்வரன் மீதான ஞானசார தேரரின் விஸ்வரூபம். அதே போல் அரசுக்கு எதிரான பாரிய சதி என்று ஐக்கிய தேசிய கட்சி கூறுவதில் உண்மை ஏதம் இல்லை. மாறாக அப்படி கூறுவதே தமிழ் தலைமைக்கு எதிரான ஒரு சதியாகத்தான் பார்க்க முடியும். எழுக தமிழ் நிகழ்வு பல விடயங்களை பேசுகின்றது. தமிழ் மக்களுடைய எண்ணப்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை பிரதிபலிக்கவில்லையா எனும் கேள்விக்கான பதில் கிடைத்திருக்கின்றது என்று கருதலாம்.

வரலாற்று ரீதியாக காலத்திற்கு காலம் தமிழ் தலைமைக்கு ஒரு மாற்று வடிவம் தேவை, அவ்விதம் ஏற்பட்டிருக்கின்றது எனும் வரலாற்று நிதர்சனத்தை கோடிட்டுக் காட்டியிக்கிறது எழுக தமிழ். இன்னுமொரு வகையில் பார்த்தால் மாவை சேனாதிராஜா அவர்கள் கூறியது போல் அரசியல் தீர்வு இவ்வருட இறுதியில் எட்டாவிட்டால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ராஜதந்திர தோல்வியாக அமையும் என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படாமல் அரசியல் தீர்வில் விசுவாசம் கொண்டு இணக்க அரசியலை நட்பு அரசியலை செய்து கொண்டிருக்கும் தமிழர்களையும் தமிழ் தலைமையையும் இந்த நல்லாட்சி அரசின்; பிரதமரான ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றி விட மாட்டார் எனும் அளவிற்கு சிறந்த அரசியல் தீர்வை கொடுத்தாக வேண்டும் எனும் நிலைப்பாட்டை ‘எழுக தமிழ்” ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படியான சிந்தனைகளை ஏற்றுக் கொண்டதினால் தான் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆதரித்து நிற்கின்றது.

எனவே நல்ல பல சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்கும் எழுக தமிழும் சி.வி விக்னேஸ்வரன் அவர்கiளுயும் ஞானசார தேரர் போன்ற இனவாதிகளின் மலினப்படுத்தப்பட்ட கருத்துக்கள் சிறுமைப்படுத்த முடியாது.