vigneswaranஅபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசு மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அக்காணிகள் எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்கு பயன்படக் கூடும் எனவும் வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல்வர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண அரசுக்கோ, மாவட்டச் செயலகங்களுக்கோ தெரியாத பல பணிகளை மத்திய அரசு முன்னெடுத்து வந்துள்ளது. அபிவிருத்தி திட்டங்களுக்காக மாகாண அரசிற்கான காணிகளை மத்திய அரசிற்கு உரிமத்துடன் வழங்க முடியாது.

அவ்வாறு வழங்குதல் எதிர்காலத்தில் வேறு பல பிரச்சினைகளை கொண்டு வரக்கூடும். அத்தோடு மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் வெற்றியளிக்கவில்லை எனவே அவர்கள் வேறு தேவைகளுக்கு காணிகளை பயன்படுத்த முடியும். இருப்பினும் இது விரும்பத்தக்கது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியை மாங்குளத்தில் நீண்ட கால குத்தகைக்கு தரலாம் என்றே தாங்கள் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

இக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இருபத்தெட்டு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும் நீர்வழங்கல், மின்சாரம், வீதி, மீன்பிடி,விவசாயம், சுகாதாரம்,கல்வி, போக்குவரத்து, ஆகிய எட்டு விடயங்கள் மாத்திரமே சபையில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.