all-ceylon-hindu-congressஇனவாதத்தைத் தூண்டும் வகையிலான பிரசாரங்களை உடன் நிறுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.

வடமாகாண முதலமைச்சர் ”எழுக தமிழ்” பேரணியில் ஆற்றிய உரையை தவறாக எடுத்துக்காட்டி தெற்கிலுள்ள அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் இனத்துவேச அறிக்கை விடுப்பதையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் கவலையை வெளியிட்டுள்ளது. ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் எதிராக தான் செயற்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையிலும், அவரை ஒரு இனவாதியாக இழிவுபடுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமஷ்டி என்பது நாட்டை பிரிப்பதல்ல என்பதை பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் எனவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் மற்றும் பொதுச் செயலாளர் வே.கந்தசாமி ஆகியோரது கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சகல இன மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது என மாமன்றம் நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கி அமுல்படுத்துவதற்காக சகல மக்களையும் அவர்கள் நெறிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.