இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
அத்துடன், உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இன்று ரணில் சந்தித்துப் பேசியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வாராணாசியில் கடந்த ஆகஸ்ட் 2-ம் திகதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அன்றைய தினமே திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், கங்காராம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தோள்பட்டை காயத்திற்கும் சிகிச்சை பெற்ற சோனியா காந்தி உடல்நலம் தேறிய பின்னரும் இரு மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை டெல்லியில் சோனியா காந்தி இன்று சந்தித்து பேசினார். இதன்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.