china-shipகொழும்பு துறைமுக நகருக்கான (போர்ட் சிற்றி) காணி மீள்நிரப்பல் வேலைகளில் ஈடுபடவுள்ள மூன்று மணல் அகழ்வு கப்பல்களில் முதலாவது கப்பல் சீனாவிலிருந்து கடந்த வியாழக்கிழமை கொழும்பு தெற்கு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மணல் அகழ்வு பிரதேச எல்லை அனுமதிப்பத்திரம் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் கருத்திட்ட நிறுவனமானது கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அபிவிருத்திக்கான அனுமதிப்பத்திரத்துடன் இணங்குமாறு காணி மீள்நிரப்பல் வேலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான சகல அனுமதிகளையும் ஒப்புதல்களையும் தற்போது கொண்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் ஒப்பந்தக்காரரான China Harbor Engineering Company (CHEC) நிறுவனம் மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பான இயங்குதலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மண் அகழ்விற்கு உட்படும் வலயத்தை ஒட்டியதாக மிதவைகளை நிறுவவுள்ளது. சுற்றாடல் நிலைமையை கண்காணிப்பதற்காக கடலிலிருந்து நிலமீட்புச் செய்யப்படும் பகுதியும் அடையாளப்படுத்தப்படவுள்ளது. அனைத்து மண் அகழ்தல் கப்பல்களும் கடலில் போக்குவரத்தில் ஈடுபடும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நீண்ட வீச்சுக் கொண்ட ராடர், ஒளிக்கட்டமைப்பு, சீசீடீவி மற்றும் அதிநவீன தொடர்புசாதனக் கட்டமைப்பைத் தம்மகத்தே கொண்டுள்ளன. மண் அகழ்தல் கப்பல்கள், கடற்கரைப்பகுதியில் இருந்து ஆகக் குறைந்தது 4 கிலோமீற்றர் தூரத்திலும் 15 மீற்றருக்கு மேற்பட்ட ஆழத்திலும் பணிகளை மேற்கொள்ளவுள்ளன. மண் அகழ்தல் நடவடிக்கையானது கடற்படுக்கையிலிருந்து 3 மீற்றர் ஆழத்திற்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன், ஆகக் குறைந்தது 0.5மீ படிவு தடிப்பானது பராமரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக, சாதாரணமாக மீன்பிடித் தொழிலுக்கு எவ்வித தடங்கலும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.