jeyampathyபிச்சைக்காரனின் புண்ணைப்போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இனியும் இழுத்தடிப்பு செய்ய முடியாதெனவும், இனப்பிரச்சினையை வைத்துக்கொண்டு இனியும் அரசியல் நடத்துவதற்கு இடமளிக்க முடியாதெனவும் அரசியலமைப்பு நிபுணரும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை இரண்டாக பிளவுபடுத்த அரசு ஒருபோதும் அனுமதிக்காதென குறிப்பிட்ட ஜயம்பதி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் நிலையானதொரு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கே முயற்சிக்கின்றதென குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் நடவடிக்கை இழுத்தடிப்பு செய்யப்படக் கூடாதென்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதென்றும், அதே நேரத்தில் நிதானமாகவும் செயற்பட்டு வருவதாகவும் ஜயம்பதி குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அரசியல் யாப்பு தயாரிப்பு தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அதன் அறிக்கையை மட்டுமே எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அரசியலமைப்பு சபைக்கு வழங்க முடியுமென்றும், அது புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் அல்லவென்றும் கலாநிதி ஜயம்பதி சுட்டிக்காட்டியுள்ளார்.