sdfdஇன்று சர்வதேச பெண் பிள்ளைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் உள்ள சுமார் 1.1 பில்லியன் பெண் பிள்ளைகளை வலுப்படுத்தி அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை ஆரம்பித்தது.

பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு பெண் பிள்ளைகள் முகங்கொடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 11 ஆம் திகதி இத்தினத்தை அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வாண்டிற்கான தொனிப்பொருளாக “பெண்கள் முன்னேற்றம், இலக்குகளின் முன்னேற்றம், ஒரு உலகளாவிய பெண் தரவு இயக்கம்” அமைந்துள்ளது. பெண் பிள்ளைகள் மீதான பாலியல் தொந்தரவுகள், சிறுவர் திருமணம், பெண் கொலை, பெண் கல்வி மறுப்பு, பதின்ம வயதில் குழந்தைப்பேறு தொடர்பான பலதரப்பட்ட தரவுகளைத் தொகுத்து, அவற்றிற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தக் கோரி இவ்வாண்டிற்கான தொனிப்பொருள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச பெண்பிள்ளைகள் தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு மற்றும் கிழக்கில் ஊர்வலங்கள் நடைபெற்றன.

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலத்தில், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலைகளின் மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது “சிறுமிகள் எமக்கு மிக மிக முக்கியமானவர்கள், பாலியல் துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுமிகளைப் பாதுகாப்போம்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை, சர்வதேச பெண்பிள்ளைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு பெண்கள் மாற்றத்திற்கான வலையமைப்பு, விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊர்வலம் வவுனியா பிரதான தபால் நிலையத்தில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றது. இதன்போது பெண் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக் கோரி மகஜர் ஒன்று மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.