ravirajமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கை ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரிப்பதற்கு அவரது உறவினர்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இன்று இடம்பெற்றபோதே அடிப்படை ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஜுரிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு முறைப்பாட்டை வழிநடத்தும் சட்டத்தரணிகளும், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும் ஏற்கனவே நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக எழுத்துமூல சமர்ப்பணம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, முறைப்பாட்டாளர் தரப்பிலும் எழுத்துமூல சமர்ப்பணத்தை நாளைய தினம் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ரவிராஜ் படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரும் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குற்றவியல் சட்டத்திற்கு அமைவான குற்றச்சாட்டுக்களும், பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு அமைவான குற்றச்சாட்டுக்களும் உள்ளதால் ஜூரிகள் சபை முன்னிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு அமைவான குற்றச்சாட்டுகளை ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரிக்க முடியுமா என்பது தொடர்பிலான எழுத்துமூல ஆவணத்தை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அறிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி நாராஹேன்பிட்டி பகுதியில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.