திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் பயணித்துக்கொண்டிருந்த வான்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.00 மணியளவில், நீதிமன்ற வீதியால் பயணித்துக்கொண்டிருந்த வானுக்குள் இருந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்ட பொலிஸார், வானை நிறுத்துமாறு சமிக்ஞை வழங்கியுள்ளபோதும், வானின் சாரதி வானை நிறுத்தாமல் செல்ல முற்பட்டபோதே, பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த திலீப்குமார் (25 வயது) மற்றும் திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்த துரைநாயகம் சுதர்ஷன் (34 வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர். வானில் பயணித்த மேலும் ஒருவரை விசாரித்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார், வானை தடுத்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.