D.Sithadthan M.P,.முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படும் ஐயப்பாடுகளை போக்கும் விதத்திலும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான உடன்பாடுகளை காண்பதற்காக அவர்களுடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாகவுள்ளது என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற யோசனை, புதிய அரசியல் அமைப்பைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழி நடத்தல் குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் அவரிடம் கருத்துக் கேட்டபோதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருதத்துத் தெரிவிக்கையில்,

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு தீவிரமாக செயற்பட்டுவரும் இத்தருணத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமாக காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இணைப்பு தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார்கள். அத்துடன் பேரினவாதத் தலைவர்களும் உக்கிரமான எதிர்ப்புக்களை கூறிவருகின்றார்கள்.

முஸ்லிம் மக்களும் தலைவர்களும் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் பயம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

முஸ்லிம் மக்களின் பயத்தைப் போக்கும் விதத்திலும் அவர்களின் அபிலாஷைகளுக்கும் தீர்வளிக்கும் வண்ணமும் அவர்களுடன் பேசி நல்லதொரு முடிவைக் காண்பதன் மூலமே வடக்கு, கிழக்கு இணைப்பை பலப்படுத்த முடியும் என்பதில் கூட்டமைப்பு தெளிவாக இருக்கிறது. கலந்து பேசுவதற்கு ஆர்வமாகவும் உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஏலவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களுடைய ஒருமித்த ஆதரவு வேண்டுமென்பதில் நாம் திடமான நம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்படுகிறோம். அவர்களுடன் இது விடயம் தொடர்பில் விரிவாகவும் அர்த்தமுனைப்புடனும் பேசக் காத்திருக்கிறோம். அது காரத்திரமான நிலைகளைக் கொண்டுவருமென எதிர்பார்க்கின்றோம்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதன் மூலமே பலமுள்ள, வலுவுள்ள, அதிகாரத்தன்மை கொண்ட ஒரு பிராந்தியமாக வடக்கு, கிழக்கை உருவாக்கமுடியும்.

இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கும் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் வேற்று நிலைப்பாடு கொண்டவர்களாகக் காணப்படுகின்றபோதும் அரசியல் தீர்வு விடயத்தில் ஒரே கருத்தையே கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். அதனைக் கூறியும் வருகின்றார்கள். தமிழ் மக்கள் பேரவையாக இருக்கலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் அல்லது இது தவிர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் அரசியல் தீர்வு விடயத்தில் ஒரே கருத்தையே முன்வைத்துள்ளார்கள். இந்த ஒற்றுமை நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டுமென்பதில் நாங்கள் கவனம் உடையவர்களாக இருக்கின்றோம்.

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அமைய தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராடினோம். ஆயுதம் ஏந்தினோம், ஆனால் இன்றைய உலக சூழ்நிலையில் நாடு பிரிவதையோ பிளவுபடுவதையோ உலக நாடுகள் விரும்பவுமில்லை. ஏற்றுக்கொள்ளவுமில்லை. அதன் நிமித்தமே பிளவுபடாத நாட்டுக்குள் எமது பிராந்தியங்களுக்குத் தேவையான அரசியல் அதிகாரவலு கொண்ட தீர்வைப் பெற்று எமது பிராந்தியத்துக்குள் நாமே நம்மை ஆட்சி செய்வதற்கான நியாயமான அரசியல் தீர்வு வேண்டுமெனக் கோரி நிற்கிறோம்.

அந்த நியாயமான தீர்வை வழங்குவதற்கு இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் முயற்சியில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் கூட்டமைப்பு காணப்படுகின்றது.

நிரந்தரமான அமைதியும், சமாதானமும் இந்நாட்டில் ஏற்பட வேண்டுமாயின் நியாhயமான தீர்வொன்று தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதை பெரும்பான்மைச் சமூகத்தவரும் இனவாதம் பேசுகின்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

நல்லதொரு சமூக, அரசியல் சூழ்நிலை காணப்படுகின்ற இச்சந்தர்ப்பதை தமிழ்த் தரப்பினர் முறையாகப் பயன்படுத்த தவறுவோமாயின் எதிர்காலம் சூனியமாகப் போய்விடும் என சித்தார்த்தன் தெரிவித்தார்.

(நன்றி: வீரகேசரி 11.10.2016)