jeyam-photoஎமது கழகத்தின் மூத்த உறுப்பினர் தோழர் ஜெயம் 09.10.2016 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இயற்கையெய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஈஸ்த்ஹாம் நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (தோழர் ஜெயம்) அவர்கள்;, தமிழ் மக்களின் விடுதலைக்காக “புதியபாதை”யாக ஆரம்பிக்கப்பட்ட எமது கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தொடக்ககால உறுப்பினராக தமிழ் மக்களின் விடுதலைக்கான தனது பணியினை தொடங்கினார்.

பின்னர் நீண்டகாலமாக கழகத்தின் பிரித்தானிய அமைப்பாளராக இருந்த தோழர் ஜெயம் அண்மையில் நடைபெற்ற கழக மாநாட்டில் கழகத்தின் மத்திய செயற்குழு அங்கத்தவராக தெரிவுசெய்யப்பட்டார். தோழர்களுடன் மிக அன்பாகவும் அன்னியோன்யமாகவும் பழகிய அதேநேரம் கண்டிப்பும் மிக்கவராக இருந்தமையால் அவர்பால் கழக தோழர்கள் மிகுந்த அன்பையும் மதிப்பையும் கொண்டிருந்தனர்.பேரினவாத அரசுகள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளையும், அவர்கள் மீது திணிக்கும் அடக்குமுறைகளையும் சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தியும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நியாயத்தை விளக்கியும் புலம்பெயர் தேசமொன்றில் முதன்முதல் நடாத்தப்பட்ட கண்டனப் பேரணியை ஒழுங்குபடுத்தி முன்னின்று நடத்தியவர்களுள் தோழர் ஜெயமும் ஒருவராவார்.

அந்தவகையில் 1984ல் முதலாவது கறுப்பு ஜுலை நினைவுநாளை லண்டனில் எழுச்சியுடன் ஏனைய இயக்க தோழர்களுடன் இணைந்து நடாத்தியதை இந்நேரத்தில் நினைவுகூர்கின்றோம்.

தமிழ் மக்களின் விடிவிற்காக நேரகாலம்பாராது தன்னை ஈடுபடுத்திய தோழர் ஜெயம் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தபின்னரும்கூட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில்; மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்தார். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நீதியான ஒரு நிரந்தர அரசியல்த் தீர்வை எட்டுவதே தங்கள் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்குமென அடிக்கடி கூறும் தோழர் ஜெயம், கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோதிலுங்கூட மக்கள் பணியிலே மிகவும் அக்கறையோடு செயற்பட்டு தனது இறுதி மூச்சுவரை கழகப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தவர்.

கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான தோழர் ஜெயம், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளராக இருந்து பாடசாலையின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை ஆர்வத்துடன் எடுத்து வந்தவர்.
அவரது இழப்பு கழகத்திற்கு மாத்திரமல்ல, எமது சமூகத்திற்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை (DPLF)

plote