bavanஅண்மையில் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தினருக்கும் வடமாகாண கல்விச் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட, வட மாகாண கல்வித்துறையின் வீழ்ச்சிக்கான காரணங்கள் நீண்ட காலமாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளவையாகும். 
வடக்கு மாகாண சபை தனது மூன்றாண்டு காலத்தை பூர்த்தி செய்தபோதிலும் கல்வித்துறை வளர்ச்சிக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த செயல்திட்டம் ஒன்றை முன்மொழிய இதுவரையிலும் அதனால் முடியவில்லை என்பது கவலையான விடயம்.

ஏனைய மாகாணங்களைப் போலல்லாது போரினால் சிதைவுற்ற வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் யாவும் பரந்துபட்ட ஆலோசனைகளை பெற்றவையாகவும், மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், பாரபட்சமற்ற இறுக்கமான நடைமுறைகளை கொண்டதாகவும் அமையவேண்டும்.

கலந்துரையாடலில் அரசியல் தலையீடுகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. வட மாகாணத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் இடமாற்றங்களின்போது மேற்கொள்ளப்படுகின்ற அநாவசியமான, அநீதியான அரசியல் தலையீடுகளை உடனடியாகவே சபையினதும் முதலமைச்சரினதும் கவனத்திற்கு கொண்டுவருவது அதிகாரிகளினதும், ஆசிரியர் சங்கங்களினதும் கடமையாகும். கவனத்திற்கு கொண்டுவரப்படும் விடயங்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பது சபையினது கடமையாகும்.
வட மாகாணத்தில் கல்வி வலயங்கள் சிலவற்றில் ஆசிரியர்கள் அளவுக்கதிகமாகவும், அதேநேரத்தில் குறித்த சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையுமே தொடர்ந்து காணப்படுகின்றது. சில பாடசாலைகளில் குறித்த பாடங்களுக்கு வருடக்கணக்கில் ஆசிரியர்கள் இல்லாத துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது. நியமனம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையுடன் பின்தங்கிய பகுதிகளிற்கு வருகை தரும் ஆசிரியர்கள் ஐந்து வருட காலத்தில் அல்லது இயலுமாயின் மிகக்குறுகிய காலத்தில் மாற்றம் பெற்று நகர்ப்புறங்களை நோக்கி சென்றுவிடுவதே இவ்வாறான நிலைமைக்கு அடிப்படையான காரணமாகும். 
மேலதிகமான ஆசிரியர்களை கொண்டுள்ள வலயங்களிற்கு புதிய நியமனங்களை வழங்குவதை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்குரிய பாடங்கள் இல்லாத நிலையில் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்களை அவர்களுடைய தேவைகள் உள்ள அருகாமையான கல்வி வலயங்களிற்கு இடமாற்றம் செய்தல் வேண்டும்.
அனைத்து கல்வி வலயங்களிலும் தேவைப்படும் பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான நியமனங்களை மட்டும் அனுமதித்தல் வேண்டும்.
சமூக நீதிக்கும் மனச்சாட்சிக்கும் புறம்பாக மாற்றம் பெற்றும் வரும் ஆசிரியர்களின் நியமனங்கள் பாடசாலைக்கு அவசியமில்லை எனில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர், அதனை நிராகரிக்க வேண்டும். அதனை வலயப் பணிப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படும் வேளையில் அந்தந்த கல்வி வலயத்தை சேர்ந்தவர்களின் அல்லது அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
2019ம் ஆண்டில் வடக்கின் சகல மாவட்டங்களுக்கும் தேவைப்படக்கூடிய ஆசிரிய ஆளணி பற்றிய முழுமையான அறிக்கையை பெற்று அதற்கேற்றவகையில் கல்வியியல் கல்லூரிகளிற்கு அனுமதிக்கப்படக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை மாவட்ட அடிப்படையில் தீர்மானிக்க கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்தல் வேண்டும்.
ஐந்து வருடங்களிற்கு கடமையாற்றினால் போதும் சொந்த இடங்களுக்கு அல்லது நகர்ப்புறங்களிற்கு மாற்றலாகி சென்றுவிடலாம் என்ற மனநிலையுடன் நியமனங்களைப் பெறும் ஆசிரியர்களை கொண்டு வன்னி மாவட்டங்களின் ஆளணியை நிரப்ப நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறான ஆசிரியர்களின் பயிற்சித் தளமாக மட்டும் பின்தங்கிய பகுதி பாடசாலைகள் திகழ்வதால் அப்பாடசாலைகளின் கற்பித்தல் தரம் மிகவும் தாழ்வான நிலையிலேயே தொடர்ந்தும் திகழ்கின்றது.
மாற்றலாகி செல்லும் ஆசிரியர்களின் இடங்களில் முறையாக நிரப்பப்படாதவிடத்து இடமாற்றங்கள் வழங்கப்படக்கூடாது. பின்தங்கிய பகுதி பாடசாலைகளிலும், பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள முக்கிய பாடசாலைகளின் விடுதி வசதிகள் போதிய அளவில் உருவாக்கப்படவேண்டும். 
மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், பின்தங்கிய மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியின்பேரில் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம், பல சந்தர்ப்பங்களில் பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்ற போதிலும் எதுவித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. 
மாகாண அதிகாரிகளினதும், ஆசிரியர் சங்கங்களினதும் அதீதமான பங்களிப்பானது, மேற்கூறப்பட்ட விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். மாகாணசபை சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அதிகமான கவனத்தை செலுத்துகிறார்கள். அதிபர், ஆசிரியர்களின் நலன்களில் சங்கங்கள் அதிக கவனத்தைச் செலுத்துகிறார்கள். மாணவர்களின் கல்வித்தரம் பற்றிய கவனம் இரண்டாம் பட்சமாக்கப்பட்டுள்ளது.
எனவே, மாகாண கல்வி அதிகாரிகள், ஆசிரியர் சங்கங்கள் இருதரப்பினரும் இணைந்து நாம் சுட்டிக்காட்டியுள்ள விடயங்களில் மிகவும் இறுக்கமான நடைமுறைகளை கொண்டு வருவார்களாயின் வட மாகாணத்தினது குறிப்பாக வன்னி மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களினது கல்வித்துறை வீழ்ச்சி அடைந்து செல்வதை இயன்றளவு விரைவாக தடுத்துநிறுத்த முடியும்.
கந்தையா சிவநேசன்,
மாகாணசபை உறுப்பினர்
முல்லைத்தீவு மாவட்டம்,
09.10.2016.