இலங்கைக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க சீன இணக்கம் தெரிவித்துள்ளது. ஆதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீன அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது இலங்கை – சீன பாதுகாப்புக் கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடுகளும் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டு அதிகாரிகள் திணைக்களத்தின் பிரதித் தலைவர் அட்மிரல் சன் ஜியாங்கூ தலைமையிலான சீன பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையிலான இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது பாதுகாப்பு உயர்மட்ட பரிமாற்றங்கள், இராணுவ உதவிகள், பாதுகாப்புத்துறைசார் நிபுணத்துவ ஒன்றுகூடல், புலனாய்வு ஒத்துழைப்பு, கூட்டு இராணுவப் பயிற்சிகள், பாதுகாப்புக் கருத்தரங்குகளில் பங்கேற்றல் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாகவும் இருதரப்பு மீளாய்வு செய்யப்பட்டது.
சீனா- இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூணாக இருப்பதாகவும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன் போது இருதரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்தப் பாதுகாப்புக் கலந்துரையாடலின் முடிவில், இலங்கைக்கு 120 மில்லியன் யுவான் (சுமார் 2623 கோடி ரூபா) பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்குவதற்கும், அதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்குவதற்குமான இரண்டு புரிந்துணர்வு உடன்பாடுகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.