ANANDASANGAREEகௌரவ ரணில் விக்ரமசிங்க, பிரதம மந்திரி
அன்புடையீர்

சாதாரண மனிதனின் பரிதாபநிலை

“யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி தேவை” என்ற தலைப்பில் கடந்த 13-06-2016 இல் மேதகு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் பிரதி தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தங்களின் கவனத்தை ஈர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அக்கடிதத்தில் அவசிய தேவையுள்ளவர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ முன்பு உணவு பொருட்கள் வழங்கப்பட்ட முறையை மீளவும் புதுப்பிக்குமாறு கேட்டிருந்தேன். 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தபின் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் லொறிகள், பெட்டியுடனான உழவு இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள்; ஆகியவற்றின் உரிமையாளர்களை அவரவர் வாகனங்களை அடையாளம் கண்டு அரசாங்க உதவியோடு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பொது இடங்களில் பாதுகாப்பில் வைக்க உதவுமாறு கேட்டிருந்தேன். துரதிஸ்டவசமாக என்னுடைய கோரிக்கையை எவரும் செவிமடுக்கவில்லை.

ஆனால் அவ்வாறு செய்திருந்தால் பலகோடி பெறுமதியான வாகனங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்துவதற்காக செலவழிக்கப்பட்ட பணம் மிகக்குறைவாகவே இருந்திருக்கும். அத்துடன் மக்கள் அதிகளவான துன்ப துயரங்களுக்கு முகம்கொடுத்திருக்கமாட்டார்கள். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் எமது மக்கள் அடுத்தவர்களிடம் கையேந்தும்; நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்தவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள் என்பதால் அவர்கள் வசதியாக வாழ்கின்றார்கள் என்ற அர்த்தமல்ல. புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கும் உதவிகள் கூட தேவையானவர்களை சென்றடையவில்லை.

கௌரவ பிரதம மந்திரி அவர்களே, சாதாரணமாக நடமாடும் மக்களுக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் அரசு எவ்வாறு செயற்படுகின்றது என்பதும் நன்றாகத் தெரியும். தமிழ் அரசியல்வாதி ஒருவரின் இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர வாகனத்துக்கு பெருந்தொகை பணம் இறக்குமதித் தீர்வாக தங்களால் வரிவிலக்கு செய்யப்பட்டதாக பத்திரிகை மூலம் அறிந்தேன். உணர்வுபூர்வமாக வாக்களித்த தமிழ் மக்கள் இதையறிந்து பெரும் சினமடைந்துள்ளனர். பட்டினியால் வாடும் குடும்பங்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள். தேவையேற்படின் கடந்த காலத்தில் தாங்கள் பிரதம மந்திரியாக இருந்தபோது வழங்கியது போல தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய டாடா, சபாரி, ஸ்கோப்பியோ போன்ற வாகனங்களை இலவசமாக அன்பளிப்பு செய்திருக்கலாம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கஸ்டங்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் கஸ்டங்களுடன் ஒப்பிட முடியும். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஏதோவொரு விதத்தில் யுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களே. ஆனால் பாதிப்பின் தன்மை வேறுபட்டவையாக இருக்கலாம். நான் மீண்டும் வற்புறுத்துவது யாதெனில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் சிலவற்றையேனும் அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றுக்கு தீர்வு காணவேண்டும்.

நான் உங்களை பணிவாக வேண்டுவது வேண்டிய தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பொருளாதார சிக்கனத்தை மக்கள் மத்தியில் கடைப்பிடிக்கக்கூடியவாறான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறே. தத்தமது குடும்பத்தினருக்கு போதிய உணவு வழங்குவதற்கு போதிய வருமானம் இல்லாதவர்களை அடையாளம் கண்டு தரம்பிரித்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் குறிப்பிட்டளவு உணவு பொருட்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்கக்கூடியவாறான முறையை கையாளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களை பதவியில் ஏற்றிவைத்த மக்கள் அப்போதுதான் மிகவும் சந்தோஷமடைவார்கள். நாட்டின் பொருளாதாரம் சீரடையும் வரை வரிவிலக்கு, வரிகுறைப்பு போன்ற விடயங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ
17-10-2016