வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி நீதவானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான பிரச்சாரம் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் உட்பட வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தனர். இதனால், நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்களில் இவ்வாறு அவதூறான செய்திகள் வெளியாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வழக்கு விசாரணைகளுக்கு வந்த மக்கள் திரும்பிச் சென்றதோடு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்காக அழைத்து வரப்பட்ட கைதிகள், மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இன்று இடம்பெறவிருந்த சகல வழக்கு விசாரணைகளும் மற்றுமொரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.