யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலைமீது மேற்கொண்ட தாக்குதலில் இந்த 68 பேரும் உயிரிழந்தனர். இன்றையதினம் இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா உயிரிழந்த உத்தியோகத்தர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட உத்தியோகத்தர்களின் உறவினர்கள் சுடரேற்றியும், மலர்மாலை அணிவித்தும் மலர்தூவியும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில், யாழ்.போதனா வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், தாதியர்கள் உட்பட கொல்லப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.